சர்ச்சையில் சிக்கிய ஷகிப் அல்ஹசன்; விசாரணைக்கு உத்தரவு.
கிரிக்கெட் பெட்டிங் நிறுவனத்தின் விளம்பரத்தில் நடித்திருக்கும் வங்கதேச கிரிக்கெட் வீரர் ஷகிப் அல்ஹசன் மீது அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளது.
வங்கதேச கிரிக்கெட்டின் நட்சத்திர வீரரும் அவ்வப்போது சர்ச்சையில் சிக்குவதை வாடிக்கையாக வைத்திருப்பவருமான ஷகிப் அல்ஹசன் மீண்டும் ஒரு சர்ச்சையில் சிக்கியிருக்கிறார்.
பெட்டிங் நிறுவனத்தின் விளம்பரத்தில் அவர் நடித்தது அந்நாட்டில் சர்ச்சையாக வெடித்துள்ளது. வங்கதேசத்தைப் பொறுத்தவரை சூதாட்டத்துக்கு தடை தொடர்கிறது. கடுமையான தண்டனைகளும் அமலில் இருக்கும் நிலையில், சூதாட்டம் தொடர்பான எந்தவொரு நடவடிக்கைகளை எளிதாக்குவதற்கும், அதனை ஊக்குவிப்பதற்கும் கூட தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்த சூழலில் ஷகிப் அல்ஹசன் “Betwinner News’ என்ற நிறுவனத்தின் விளம்பரத்தில் நடித்திருப்பதாக புகைப்படம் வெளியாகியுள்ளது.
அந்த நிறுவனமும் ஷகிப் அல்ஹசன் இருக்கும் புகைப்பட்டத்தை தங்களுடைய சமூகவலைதள பக்கத்தில் பதிவு செய்தது. இந்த விவகாரம் வங்கதேச கிரிக்கெட் போர்டின் கவனத்துக்கு உடனடியாக சென்றது. அந்நாட்டு கிரிக்கெட் சங்க நிர்வாகிகள் இது தொடர்பாக ஆலோசனையிலும் ஈடுபட்டனர். வங்கதேச கிரிக்கெட் போர்டின் தலைவர் நஸ்முல் ஹாசனிடம் சிலர் நேரடியாக முறையிட்டுள்ளனர்.
இது குறித்து பேசிய நஸமுல் ஹாசன், பெட்டிங் நிறுவனத்தின் விளம்பரத்தில் ஷகிப் அல்ஹசன் நடித்தது குறித்து விளக்கம் கேட்டு ஷோகாஸ் நோட்டீஸ் வழங்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார். கிரிக்கெட் மட்டுமின்றி, வங்கதேச சட்டம் இதனை அனுமதிக்காது எனத் தெரிவித்துள்ள அவர், சர்வதேச கிரிக்கெட்டில் பெரிய அனுபவம் கொண்ட அவரிடம் முழுமையான விளக்கத்தை பெற்ற பிறகு அடுத்தக்கட்ட நடவடிக்கை குறித்து ஆலோசனை நடத்தப்படும் எனத் தெரிவித்துள்ளார்.
மேலும், நஸ்முல்ஹாசன் பேசும்போது, ” இந்த விவகாரத்தில் இரண்டு விஷயங்களை கவனத்தில் கொள்ள வேண்டும். விளம்பரத்தில் நடிப்பதற்காக கிரிக்கெட் போர்டிடம் அவர் எந்த அனுமதியும் கேட்கவில்லை. அதேநேரத்தில் அவர் பெட்டிங் நிறுவனத்தின் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டாரா? இல்லையா? என்பதை அறிய வேண்டியிருக்கிறது.
பேஸ்புக் உள்ளிட்ட சமூகவலைதளங்களின் பதிவுகளை மட்டும் வைத்து எந்த முடிவுக்கும் வர முடியாது. விசாரணையின் முடிவில் அவரின் மீதான குற்றம் நிரூபிக்கப்பட்டால் நிச்சயம் தண்டிக்கப்படுவார் எனத் தெரிவித்துள்ளார்.