வங்கதேசத்தை வீழ்த்தி ஜிம்பாப்வே: 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி.
வங்கதேச அணிக்கு எதிரான ஒருநாள் போட்டியில் இலக்கை வெற்றிகரமாக விரட்டி பிடித்துள்ளது ஜிம்பாப்வே அணி. இதன் மூலம் பத்து பந்துகள் எஞ்சியிருக்க 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது அந்த அணி.வங்கதேச கிரிக்கெட் அணி ஜிம்பாப்வே நாட்டில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு கிரிக்கெட் தொடரில் விளையாடி வருகிறது.
முன்னதாக, இரு அணிகளுக்கு இடையிலான டி20 தொடரை ஜிம்பாப்வே அணி 2-1 என்ற கணக்கில் வென்றது. இந்நிலையில், இப்போது இரு அணிகளுக்கும் இடையிலான 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடர் தொடங்கியுள்ளது.
இன்று (ஆகஸ்ட் 5) தொடங்கிய முதல் போட்டியில் டாஸ் வென்ற ஜிம்பாப்வே அணி பவுலிங் தேர்வு செய்தது. வங்கதேச அணி முதலில் பேட் செய்து 50 ஓவர்கள் முடிவில் இரண்டு விக்கெட்டுகள் இழப்பிற்கு 303 ரன்களை குவித்தது. அந்த அணியின் டாப் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் நான்கு பேரும் அரை சதம் பதிவு செய்திருந்தனர்.
தொடர்ந்து 304 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை ஜிம்பாப்வே விரட்டியது.
அந்த அணியின் பேட்ஸ்மேன்கள் இன்னசென்ட் கையா மற்றும் சிக்கந்தர் ரஸாவும் நான்காவது விக்கெட்டிற்கு 192 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தனர். அது அந்த அணிக்கு வெற்றி கூட்டணியாக அமைந்தது. இருவரும் சதம் பதிவு செய்தனர். 48.2 ஓவர்களில் ஐந்து விக்கெட்டுகளை இழந்து 307 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது அந்த அணி.
இந்த வெற்றி ஜிம்பாவே அணிக்கு மறக்கமுடியாத வெற்றியாக அமைந்துள்ளது. நடப்பு ஆண்டில் ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் அந்த அணி பதிவு செய்துள்ள இரண்டாவது வெற்றியாக இது அமைந்துள்ளது.