பெண்களுக்கு இலவச பேருந்து பயண திட்டம்.. யோகி அரசு அறிவிப்பு
நாடு முழுவதும் ரக்ஷாபந்தன் பண்டிகை ஆகஸ்ட் 11ஆம் தேதி கொண்டாடப்படுகிறது. இந்த நாளில் சகோதர சகோதரிகளின் உறவை போற்றி அதை அடையாளப்படுத்தும் விதமாக, பெண்கள் தாங்கள் சகோதரராகப் பாவிக்கும் ஆண்களுக்கு கைகளில் ராக்கி கட்டுவது வழக்கம்.
சகோதரரின் நலனை பெண்கள் விரும்பி இந்த ராக்கியை ஆணின் கையில் கட்டுவார்கள். அதேபோல், அந்த பெண்ணின் நலனை காக்கும் சகோதரனாக ஆண் மனதில் உறுதி எடுத்துக் கொள்வார்கள். இந்த பண்டிகை வடமாநிலங்களில் வெகு விமரிசையாக கொண்டாடப்படும். இந்நிலையில், இந்தாண்டு நாட்டின் 75ஆவது சுதந்திர தினம் விடுதலையின் அமிர்த பெருவிழா என்ற பெயரில் கொண்டாடப்பட்டு வருகிறது.
ரக்ஷாபந்தன் விழாவையும், 75ஆவது சுதந்திர தின விழாவையும் ஒருங்கிணைத்து கொண்டாடும் விதமாக உத்தரப் பிரதேச மாநிலத்தில் ஆகஸ்ட் 10 முதல் 12ஆம் தேதி வரை பெண்களுக்கான இலவச பேருந்து பயணத் திட்டத்தை அம்மாநில அரசு அறிவித்துள்ளது. இந்த அறிவிப்பை மாநில முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் வெளியிட்டுள்ளார். மேற்கண்ட இரண்டு நாள்களில் மாநில அரசின் பேருந்துகளில் பெண்கள் இலவசமாக பயணம் செய்து கொள்ளலாம் என யோகி அரசு அறிவித்துள்ளது.
அதேபோல், அனைத்து அரசு பேருந்துகளிலும் சுதந்திர தின கொண்டாட்டத்தை அடையாளப்படுத்தும் விதமாக தேசிய கொடி வைத்திருக்கப்படும் என அரசு கூறியுள்ளது.
உத்தரப் பிரதேசம் மட்டுமல்லாது, பாஜக ஆளும் மாநிலங்களான ஹரியானா மற்றும் உத்தரகாண்டிலும் ரக்ஷாபந்தன் நாளில் பெண்களுக்கு இலவச பேருந்து சேவை என்ற திட்டத்தை மாநில அரசுகள் அறிவித்துள்ளன.