பச்சைக் குத்திக் கொண்ட இருவருக்கு எச்ஐவி: எச்சரிக்கும் மருத்துவர்கள்
வாராணசி: உடலில் பச்சைக் குத்திக் கொண்ட இரண்டு இளைஞர்களுக்கு இரண்டு மாதத்துக்குள் எச்ஐவி உறுதி செய்யப்பட்டிருக்கும் சம்பவம், வாராணசி மாவட்ட மருத்துவமனையில் உள்ள மருத்துவர்களை அதிர்ச்சியடையச் செய்துள்ளது.
பாதிக்கப்பட்டவரின் ரத்தத்தை தானமாக பெறும்போது அல்லது பாதிக்கப்பட்டவருடன் உடலுறவு கொள்ளும் போது மட்டுமே எய்ட்ஸ் எனப்படும் எச்ஐவி பரவும். ஆனால், இவர்கள் பச்சைக் குத்திக் கொண்ட பிறகு எச்ஐவி பரவியிருக்கிறது என்றால், எச்ஐவி தொற்று இருந்த ஊசிகளை பச்சைக் குத்த பயன்படுத்தியிருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுவதாகவும் மருத்துவர்கள் கூறுகிறார்கள்.
இந்த தகவலை காவல்துறையினரும் உறுதி செய்துள்ளனர். அவர்கள் இருவரும் தற்போது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.
20 வயது இளைஞர் ஒருவர் இரண்டு மாதத்துக்கு முன்பு பச்சைக் குத்திக் கொண்டார். அதன்பிறகு அவருக்கு கடுமையான காய்ச்சல் மற்றும் உடல் மெலிவு ஏற்பட்டுள்ளது. அனைத்து விதமான சிகிச்சையும் பரிசோதனையும் செய்யப்பட்டும் கூட அவரது உடலில் ஏற்பட்ட பாதிப்பைக் கண்டறிய முடியவில்லை. இறுதியாக மருத்துவர்கள் எச்ஐவி பரிசோதனை செய்த போது அது உறுதியாகியுள்ளது.
இதைக் கேட்டு அதிர்ச்சி அடைந்த இளைஞர், அந்த பரிசோதனை முடிவு தவறாக இருக்கலாம் என்றே கருதினார். எச்ஐவி பாதிப்பு ஏற்படுவதற்கான எந்த காரணமும் தனக்கில்லை என்று உறுதியாக நம்பினார்.
பிறகு மீண்டும் பரிசோதனை செய்யப்பட்டு, எச்ஐவி உறுதியான பிறகே, மருத்துவர்கள் பச்சைக் குத்திக் கொண்டது காரணமாக இருக்கலாம் என்பதை கண்டறிந்தனர்.
இதுபோல, மற்றொரு பெண்ணும், இரண்டு மாதங்களுக்கு முன்பு உடலில் பச்சைக் குத்திக் கொண்ட நிலையில் உடல்நல பாதிப்பு ஏற்பட்டு மருத்துவப் பரிசோதனையில் எச்ஐவி உறுதியானது.
பச்சைக் குத்திக் கொண்ட பிறகே தனக்கு இதுபோன்ற பிரச்னைகள் ஏற்பட்டதாக அவர்கள் கூறியதைத் தொடர்ந்து இது கண்டுபிடிக்கப்பட்டது.
என்ன நடந்திருக்கலாம்?
பொதுவாக டாட்டூ எனப்படும் பச்சைக் குத்தப் பயன்படுத்தும் ஊசியின் விலை மிகவும் அதிகம். ஒருவருக்கு ஒரு ஊசியைப் பயன்படுத்தியதும், அதனை தூக்கி எறிந்துவிட வேண்டும். ஆனால், லாபம் சம்பாதிக்க வேண்டும் என்பதற்காக பலரும் ஒரே ஊசியை பலருக்கும் பயன்படுத்துகிறார்கள்.
இதனால், எச்ஐவி பாதித்த ஒருவர் பச்சைக் குத்திக் கொண்டதும், அதே ஊசியில் மற்றவர்கள் பச்சைக் குத்திக் கொள்ளும்போது நிச்சயம் பாதிப்பு ஏற்படும் அபாயம் உள்ளது. பச்சைக் குத்திக் கொள்ளும் ஒருவர், தனக்கு பச்சைக் குத்தும் முன், புதிய ஊசியை மாற்றுகிறாரா என்பதை பரிசோதித்துக் கொள்வது அவசியம். இந்த அபாயத்தை உணராமல் பச்சைக் குத்திக் கொள்வது உயிராபத்தை ஏற்படுத்தலாம் என்கிறார்கள் மருத்துவர்கள்.