சிங்கப்பூரில் மேலும் 14 நாட்கள் தங்க அனுமதி கோரும் கோட்டா.
இலங்கையின் முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச சிங்கப்பூரில் மேலும் 14 நாட்கள் தங்கியிருப்பதற்கு அனுமதி கோரி விண்ணப்பித்துள்ளார் என்று தெரிவிக்கப்படுகின்றது.
தற்போது சிங்கப்பூரில் தங்கியுள்ள கோட்டாபய ராஜபக்ச எதிர்வரும் 11ஆம் திகதி நாடு திரும்புவார் என்று தெரிவிக்கப்பட்டது.
எவ்வாறாயினும், அவர் இந்த மாதம் இறுதிவரை சிங்கப்பூரில் தங்கியிருக்கும் வகையில் மேலும் 14 நாட்கள் தங்கியிருப்பதற்குச் சிங்கப்பூர் அரசிடம் கோரிக்கை விடுத்துள்ளார் என்று அரசியல் உள்ளக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இதேவேளை, ‘முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச, நாடு திரும்புவதற்குப் பொருத்தமான நேரம் இதுவல்ல. அவர் இந்த நேரத்தில் நாட்டுக்கு வந்தால் அரசியல் ரீதியிலான பிரச்சினைகள் ஏற்படலாம்’ – என்று ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க வெளிநாட்டு ஊடகம் ஒன்றுக்குக் கடந்த வாரம் வழங்கிய நேர்காணலில் தெரிவித்திருந்தார்.
இதற்கு உள்நாட்டு ஊடகங்களிடம் பதிலளித்திருந்த ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் பொதுச்செயலாளர் சாகர காரியவசம் எம்.பி., ‘கோட்டாபய ராஜபக்ச நாடு திரும்பினால் முன்னாள் ஜனாதிபதி என்ற வகையில் அவருக்குத் தேவையான பாதுகாப்பு உள்ளிட்ட வசதிகளை அரசு செய்து கொடுக்க வேண்டும்’ – என்று கூறியிருந்தார்.