விண்டீஸ் வீரர்களை திணறடித்த அர்ஸ்தீப் சிங்… டி.20 தொடரை கைப்பற்றியது இந்திய அணி.
விண்டீஸ் அணிக்கு எதிரான நான்காவது டி.20 போட்டியில் இந்திய அணி 59 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றுள்ளது.
வெஸ்ட் இண்டீஸ் சென்றுள்ள இந்திய கிரிக்கெட் அணி, விண்டீஸ் அணியுடன் ஐந்து டி.20 போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்றது.
இந்த தொடரின் முதல் மூன்று போட்டிகள் முடிவில் இந்திய அணி இரண்டு போட்டியிலும், விண்டீஸ் அணி ஒரு போட்டியிலும் வெற்றி பெற்றிருந்த நிலையில், இரு அணிகள் இடையேயான நான்காவது டி.20 போட்டி அமெரிக்காவின் ப்ளோரிடா மைதானத்தில் நடைபெற்றது.
இதில் டாஸ் வென்ற விண்டீஸ் அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்ததை தொடர்ந்து, முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட் இழப்பிற்கு 191 ரன்கள் எடுத்தது. இந்திய அணியில் அதிகபட்சமாக ரிஷப் பண்ட் 44 ரன்களும், ரோஹித் சர்மா 33 ரன்களும் எடுத்தனர்.
இதன்பின் 192 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை துரத்தி களமிறங்கிய விண்டீஸ் அணி நிக்கோலஸ் பூரண் மற்றும் ரோவ்மன் பவல் ஆகியோர் தலா 24 ரன்கள் எடுத்து கொடுத்தாலும், மற்ற வீரர்கள் இந்திய அணியின் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் அடுத்தடுத்து விக்கெட்டை இழந்து நடையை கட்டியதால் 19.1 ஓவரில் 132 ரன்கள் எடுத்த போது அனைத்து விக்கெட்டுகளையும் பறிகொடுத்த விண்டீஸ் அணி 59 ரன்கள் வித்தியாசத்தில் படுதோல்வியடைந்தது.
இந்திய அணி சார்பில் அதிகபட்சமாக அர்ஸ்தீப் சிங் மற்றும் அக்ஷர் பட்டேல் ஆகியோர் தலா 3 விக்கெட்டுகளை கைப்பற்றினர்.
விண்டீஸ் அணிக்கு எதிரான இந்த வெற்றியின் மூலம், டி.20 தொடரை 3-1 என்ற கணக்கில் இந்திய அணி கைப்பற்றியுள்ளது.