நாமல், ஜோன்ஸ்டன், பவித்ரா, எஸ்.பி. ஆகியோருக்கும் அமைச்சுப் பதவிகள் ஜனாதிபதியிடம் ‘மொட்டு’ பரிந்துரை.
சர்வகட்சி அரசில் முன்னாள் அமைச்சர்களான ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ, நாமல் ராஜபக்ச, பவித்ரா வன்னியாரச்சி, எஸ்.எம். சந்திரசேன, ரோஹித அபேகுணவர்தன மற்றும் எஸ்.பி.திஸாநாயக்க ஆகியோருக்கும் அமைச்சுப் பதவிகளை வழங்குமாறு ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணி, ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிடம் பரிந்துரைத்துள்ளது.
பிரதமர் தினேஷ் குணவர்த்தனவுக்கும், ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் தேசிய அமைப்பாளர் பஸில் ராஜபக்சவுக்கும் இடையிலான சந்திப்பு பத்தரமுல்லையில் உள்ள பொதுஜன முன்னணியின் தலைமையகத்தில் இடம்பெற்றது.
இந்தச் சந்திப்பில் பொதுஜன முன்னணியின் பெரும்பாலான உறுப்பினர்கள் கலந்துகொண்டனர்.
இதன்போதே மேற்படி பரிந்துரையை பொதுஜன முன்னணி முன்வைத்துள்ளது.
நாடாளுமன்றில் அங்கம் வகிக்கும் சகல அரசியல் கட்சிகளையும் ஒன்றிணைத்து அமைக்கப்படும் சர்வகட்சி அரசின் வியூகம் தொடர்பில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கும், அரசியல் கட்சிகளுக்கும் இடையிலான விசேட சந்திப்பு தொடர்ச்சியாக இடம்பெற்று வருகின்றன.
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி, ஐக்கிய மக்கள் சக்தி, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு மற்றும் நாடாளுமன்றில் சுயாதீனமாகச் செயற்படும் 10 அரசியல் கட்சிகளுக்கும் ஜனாதிபதிக்கும் இடையிலான சந்திப்பு கடந்த நாட்களில் இடம்பெற்றன.
மக்கள் விடுதலை முன்னணிக்கும், ஜனாதிபதிக்கும் இடையிலான சந்திப்பு எதிர்வரும் செவ்வாய்க்கிழமை இடம்பெறவுள்ளது.
இந்நிலையில், சர்வகட்சி அரசு தொடர்பில் பிரதமருக்கும், பொதுஜன முன்னணியின் உறுப்பினர்களுக்கும் இடையிலான சந்திப்பு இடம்பெற்றுள்ளது.