சீனக் கப்பல் நெருக்கடி :சீனத் தூதுவர் ஜனாதிபதியை சந்தித்தார் : சீனா இலங்கைக்கான கடனை நிறுத்தியது.
சீனாவின் யுவான் வாங் 5 தொடர்பாடல் கப்பலை அம்பாந்தோட்டை துறைமுகத்திற்கு வர வழங்கப்பட்டிருந்த அனுமதியை இந்திய அழுத்தத்தின் காரணமாக இலங்கை அரசாங்கம் இரத்துச் செய்தமை தொடர்பில் சீனத் தூதுவர் கீ ஷெங்ஹோங் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவை சந்தித்து தனது அதிருப்தியை வெளிப்படுத்தினார்.
இந்த சந்திப்பு நேற்று மாலை இடம்பெற்றதாக தெரிவிக்கப்படுகிறது.
அத்தோடு சீனா வழங்கவிருந்த மத்திய அதிவேக நெடுஞ்சாலையின் முதல் கட்ட கட்டுமானத்திற்கு தேவையான 51 மில்லியன் அமெரிக்க டாலர் கடனை சீனாவின் எக்ஸிம் வங்கி நிறுத்தியுள்ளது.
இலங்கையில் தற்போது நிலவும் பொருளாதார நெருக்கடி காரணமாக சீனாவின் எக்சிம் வங்கியிடமிருந்து பணம் விடுவிப்பது இடைநிறுத்தப்பட்டுள்ளதுடன், இதன் காரணமாக குறித்த திட்டம் தொடர்பில் அரசாங்கம் நெருக்கடியை எதிர்நோக்கியுள்ளது.
வெளிநாட்டுக் கடன்களை மீளச் செலுத்துவதை இடைநிறுத்த இலங்கை தீர்மானித்திருப்பதும் சீனாவின் தீர்மானத்தினால் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.
கடவத்தைக்கும் மீரிகமவுக்கும் இடையிலான 37 கிலோமீற்றர் திட்டத்தில் பணிபுரிந்த சுமார் 500 சீன பிரஜைகள் வெளியேறத் தொடங்கியுள்ளனர், இதனால் உள்ளூர்வாசிகளான சுமார் 2000 பேர்களது வேலைகள் இல்லாமல் போக உள்ளது.
திட்டத்தின் கட்டுமானம் செப்டம்பர் 2020 இல் தொடங்கியது . அது 2024 இறுதிக்குள் முடிக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டிருந்தது.
இலங்கை அரசாங்கத்தின் சுமார் 33 பில்லியன் ரூபா மூலம் இதுவரை சுமார் 32 வீதமான வேலைத்திட்டம் பூர்த்தி செய்யப்பட்டுள்ளது.