தேசிய ரீதியிலான பளு தூக்கல் போட்டியில் மூன்று புதிய சாதனைகளை படைத்த தென்மராட்சி வீரன்.
தேசிய ரீதியான பளு தூக்கல் போட்டியில் யாழ்ப்பாணம், தென்மராட்சி பிரதேசத்தைச் சேர்ந்த இளைஞர் ஒரே நாளில் மூன்று புதிய சாதனைகளைப் படைத்துள்ளார்.
தேசிய ரீதியில் நேற்றுமுன்தினம் பண்டாரகம பகுதியில் நடைபெற்ற பளு தூக்கல் போட்டியில் 25 மாவட்டங்களையும் சேர்ந்த 44 இற்கும் மேற்பட்ட போட்டியாளர்கள் கலந்துகொண்டனர்.
இந்தப் போட்டியில் யாழ்ப்பாணம் மாவட்டத்தில் இருந்து ஒரே ஒருவராக தென்மராட்சி – சாவகச்சேரியைச் சேர்ந்த சற்குணராசா புசாந்தன் கலந்துகொண்டு மூன்று பிரிவுகளில் நடைபெற்ற போட்டியில் மூன்றிலும் வென்று மூன்று தங்கப் பதக்கங்களைப் பெற்றுள்ளார்.
120 கிலோவுக்கு மேற்பட்டோருக்கான பிரிவில் கலந்துகொண்ட இவர், Squat பிரிவில் 330 கிலோகிராமையும், Benchpress பிரிவில் 175 கிலோகிராமையும், Deadlift பிரிவில் 261 கிலோகிராமையும் தூக்கி வெற்றி பெற்றுள்ளார். இதில் Squat மற்றும் Deadlift பிரிவில் புதிய சாதனையையும் அவர் நிலைநாட்டியுள்ளார்.
அத்துடன் குறித்த போட்டியில் மொத்தமாக 766 கிலோகிராமைத் தூக்கிப் புதிய சாதனையையும் படைத்துள்ளார்.
JK Fitness இன் பயிற்றுவிப்பு, ஊக்குவிப்பு, வழிகாட்டல் ஊடாக இந்தத் தேசிய சாதனைகளை சற்குணராசா புசாந்தன் நிகழ்த்தியுள்ளார்.
யாழ்.,தென்மராட்சிப் பகுதியைச் சேர்ந்த இளைஞர் தேசிய ரீதியில் நடைபெற்ற பளு தூக்கல் போட்டியில் தேசிய ரீதியில் மூன்று சாதனைகளைப் படைத்து மூன்று தங்கப் பதக்கங்களை வென்றுள்ளதை அடுத்து பலரும் தமது பாராட்டுக்களைத் தெரிவித்து வருகின்றனர்.
புசாந்தன் மென்மேலும் சாதனைகளைப் படைத்து யாழ்ப்பாணம் மாவட்டத்துக்கும், வடக்கு மாகாணத்துக்கும் பெருமை சேர்ப்பார் என்று JK Fitness இன் பயிற்றுவிப்பாளர் JK நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.
“முற்று முழுதாக என்னை என் கனவுகளுக்காக அர்ப்பணிக்கப் போகின்றேன். சர்வதேச ரீதியிலான வெற்றிக் கனவை நோக்கி நகரப் போகின்றேன்” – என்று JK Fitness இன் பயிற்சியாளரும் தேசிய ரீதியான பளு தூக்கல் போட்டியில் மூன்று புதிய சாதனைகளைப் படைத்தவருமான புசாந்தன் தெரிவித்துள்ளார்.