மகளிர் கிரிக்கெட்டின் தங்கப்பதக்கம் அவுஸ்திரேலிய அணிக்கு.
பொதுநலவாய விளையாட்டு விழாவின் மகளிர் T20 கிரிக்கெட் தொடர் இறுதிப் போட்டியில் 09 ஓட்டங்களால் இந்திய அணியினை வீழ்த்திய அவுஸ்திரேலியா, மகளிர் T20 கிரிக்கெட் தொடருக்கான தங்கப் பதக்கத்தினை வென்றிருக்கின்றது.
இதேநேரம் தொடரின் இறுதிப் போட்டியில் தோல்வியடைந்த இந்திய மகளிர் கிரிக்கெட் அணி வெள்ளிப்பதக்கத்தினைப் பெற்றிருக்கின்றது.
பொதுநலவாய விளையாட்டு விழாவின் மகளிர் T20 கிரிக்கெட் தொடருக்குரிய இறுதிப் போட்டி ஞாயிற்றுக்கிழமை (07) பேர்மிங்கம் நகரில் ஆரம்பமானது.
இந்த இறுதிப் போட்டிக்கு தொடரின் அரையிறுதிகளில் அவுஸ்திரேலிய அணி நியூசிலாந்தை தோற்கடித்தும், இந்தியா இங்கிலாந்து அணியினை தோற்கடித்தும் தெரிவாகியிருந்தன.
தொடர்ந்து போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற அவுஸ்திரேலிய கிரிக்கெட் அணி, முதலில் துடுப்பாடி பெத் மூனியின் அரைச்சத உதவியோடு 20 ஓவர்களில் 8 விக்கெட்டுக்களை பறிகொடுத்து 161 ஓட்டங்கள் எடுத்தது. அவுஸ்திரேலிய மகளிர் அணி துடுப்பாட்டத்தில் பெத் மூனி 41 பந்துகளுக்கு 8 பௌண்டரிகள் அடங்கலாக 61 ஓட்டங்கள் பெற்றார். இவரோடு அணித்தலைவி மெக் லன்னிங் 26 பந்துகளில் ஒரு சிக்ஸர் மற்றும் 5 பௌண்டரிகள் அடங்கலாக 36 ஓட்டங்கள் எடுத்தார்.
இந்திய அணியின் பந்துவீச்சில் ஸ்னேஹ் ரனா மற்றும் ரேனுகா சிங் ஆகியோர் தலா 2 விக்கெட்டுக்கள் வீதம் சாய்த்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
பின்னர் போட்டியின் வெற்றி இலக்காக நிர்ணயம் செய்யப்பட்ட 162 ஓட்டங்களை 20 ஓவர்களில் அடைய பதிலுக்கு துடுப்பாடிய இந்திய மகளிர் கிரிக்கெட் அணி 19.3 ஓவர்களுக்கு அனைத்து விக்கெட்டுக்களையும் பறிகொடுத்து 152 ஓட்டங்களை மாத்திரம் எடுத்து தோல்வியினைத் தழுவியது.
இந்திய மகளிர் அணியின் துடுப்பாட்டம் சார்பில் போராட்டம் காட்டிய அதன் தலைவி ஹர்மன்பீரித் கவுர் 43 பந்துகளில் 2 சிக்ஸர்கள் மற்றும் 7 பௌண்டரிகள் அடங்கலாக 65 ஓட்டங்களை எடுத்திருந்தார்.
அவுஸ்திரேலிய மகளிர் அணியின் பந்துவீச்சு சார்பில் ஏஷ்லி கார்ட்னர் 3 விக்கெட்டுக்களை கைப்பற்றியும், மேகன் ஸ்ச்சட் 2 விக்கெட்டுக்களை கைப்பற்றியும் தமது தரப்பு வெற்றியினை உறுதி செய்தனர்.
இதேநேரம் வெண்கலப் பதக்கத்திற்காக நடைபெற்ற போட்டியில் இங்கிலாந்து மகளிர் அணியினை 8 விக்கெட்டுக்களால் வீழ்த்திய நியூசிலாந்து, தொடரில் மூன்றாம் இடத்தினைப் பெற்றுக் கொண்டதோடு வெண்கலப் பதக்கத்தின் சொந்தக்காரர்களாகவும் மாறிக்கொண்டது.