திருடப்பட்ட கும்பகோணம் நடனபுரீஸ்வரர் கோயில் பார்வதி சிலை அமெரிக்காவில் கண்டுபிடிப்பு
கும்பகோணம் நடனபுரீஸ்வரர் சிவன் கோவில் பார்வதி சிலை அமெரிக்காவில் ஏல கடை ஒன்றில் இருப்பதை சிலை கடத்தல் தடுப்பு பிரிவினர் கண்டுபிடித்துள்ளனர்.
தாண்டந்தோட்டம் நடனபுரீஸ்வரர் சிவன் கோவிலில் கடந்த 1971ம், ஆண்டு 5 பழங்கால சிலைகள் திருடப்பட்டுள்ளது. இது குறித்து காவல் நிலையத்தில் வாசு என்பவர் 2019ம் ஆண்டு புகார் அளித்துள்ளார். அந்த புகாரில் கோவிலில் இருந்து 5 பழங்கால சிலைகள் திருடப்பட்டதாகவும், அந்த 5 சிலைகளின் பெயர் விவரங்களையும்,
சிலை பற்றிய குறிப்புகளையும், குற்றம் நடந்த இரவு கோவிலின் பூட்டு உடைக்கப்பட்டு சிலைகள் திருடப்பட்டு உள்ளதை குறித்தும் நாச்சியார் கோவில் காவல் நிலையத்தில் புகார் அளித்து பின் சார்பு ஆய்வாளர் சென்று பார்வையிட்டும், பின் 5 சிலைகளின் புகைப்படங்கள் பாண்டிச்சேரியின் பிரெஞ்சு நிறுவனத்தில் உள்ளது என்று தெரிவித்தும், சிலை திருடப்பட்டு 46 ஆண்டுகளாகியும் முதல் தகவல் அறிக்கை (FIR) எதுவும் பதிவு செய்யாதது துரதிருஷ்டவசமானது என்று புகாரில் வாசு குறிப்பிட்டுள்ளார்.
இந்த வழக்கு தொடர்பாக சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் வழக்குபதிவு செய்து சிலையை தேடியுள்ளனர். தற்போது அமெரிக்காவின் போன்ஹாம்ஸ் ஏல இல்லத்தில் 50 செமீ உயரம் கொண்ட சோழர் காலத்து பார்வதி சிலை ஒன்று இருப்பதை சிலை கடத்தல் போலீசார் கண்டுபிடித்துள்ளதாக கூறியுள்ளனர். 1971ஆம் ஆண்டு இந்தியாவிலிருந்து கடத்தி வரப்பட்ட இந்த சிலை நியூயார்க்கில் விற்கப்பட்டதும் தெரியவந்துள்ளது.
இதையடுத்து பார்வதி சிலையை இந்தியாவிற்கு கொண்டு வருவதற்கான நடவடிக்கைகளை சிலை கடத்தல் தடுப்பு பிரிவு தொடங்கியுள்ளது.