ராஜஸ்தான் ஷியாம்ஜி கோயில் கூட்ட நெரிசலில் சிக்கி 3 பெண்கள் பலி..
ராஜஸ்தான் மாநிலம் சிகார் மாவட்டம் ஷேகாவதி என்ற பகுதியில் பிரசித்தி பெற்ற கத்து ஷியாம் கோயில் உள்ளது. இந்த கோயிலுக்கு உலகின் பல்வேறு பகுதியில் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருகை தந்து வழிபடுவது வழக்கம்.
அப்பகுதி பஞ்சாங்கப்படி இன்றைய தினம் மிகவும் புனிதம் வாய்ந்த நாளாக கருதப்படுகிறது. எனவே, இந்த நாளில் கத்து ஷியாம் கோயிலில் வழிபடுவதை அப்பகுதி மக்கள் முக்கிய வழக்கமாக கொண்டுள்ளனர். இதையடுத்து இன்று அதிகாலை 5 மணி அளவில் அந்த கோயில் வாசலில் நூற்றுக்கணக்கில் மக்கள் திரண்டுள்ளனர். அப்போது கோயில் வாசல் திறக்கப்பட்ட நிலையில், குறுகலான வாயிலுக்குள் நுழைய மக்கள் முந்தியடித்து சென்றுள்ளனர். இதன் காரணமாக அங்கு தள்ளுமுள்ளு ஏற்பட்டு பலர் கீழே விழுந்துள்ளனர். இந்த கூட்ட நெரிசல் ஒரு கட்டத்தில் சரி செய்ய முடியாத சூழலுக்கு தள்ளப்பட்ட நிலையில், கூட்ட நெரிசலில் மூன்று பெண்கள் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். இருவர் படுகாயம் அடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.
தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த காவல்துறை நிலைமையை கட்டுக்குள் கொண்டுவந்துள்ளது. சம்பவயிடத்தில் அம்மாவட்ட காவல் கண்காணிப்பாளர் குன்வார் ராஷ்டிரதீப் நேரில் சென்று பார்வையிட்டார். சம்பவம் தொடர்பாக உரிய விசாரணை நடத்த உத்தரவிட்டுள்ளார்.
இந்த துயர சம்பவத்திற்கு பிரதமர் மோடி ட்விட்டரில் வருத்தம் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக பிரதமர் தனது ட்விட்டர் பதிவில், ‘ராஜஸ்தான் கத்து ஷியாம் கோயிலில் கூட்ட நெரிசலில் சிக்கி சிலர் உயிரிழந்த சம்பவம் வேதனை அளிக்கிறது. அவர்களின் குடும்பத்திற்கு ஆழ்ந்த இரங்கல். காயம் அடைந்தவர்கள் விரைந்து குணமடைய வேண்டும் என பிரார்த்திக்கிறேன்’ என்றார்.
இந்த விபத்திற்கு ராஜஸ்தான் முதலமைச்சர் அசோக் கெலாட்டும் தனது கவலையை தெரிவித்துள்ளார். மாவட்ட நிர்வாகம் துரித நடவடிக்கை எடுக்கவும் அவர் உத்தரவிட்டுள்ளார்.