பிரதமர் மோடிக்கு ராக்கி அனுப்பிய பாகிஸ்தான் சகோதரி.. 2024 தேர்தலில் வெற்றி பெற வாழ்த்து!
நாடு முழுவதும் ஆகஸ்ட் 11ஆம் தேதி ரக்ஷாபந்தன் விழா கொண்டாடப்படுகிறது. இந்த நாளில் சகோதர சகோதரிகளின் உறவை போற்றி அதை அடையாளப்படுத்தும் விதமாக, பெண்கள் தாங்கள் சகோதரராகப் பாவிக்கும் ஆண்களுக்கு கைகளில் ராக்கி கட்டுவது வழக்கம்.
சகோதரரின் நலனை பெண்கள் விரும்பி இந்த ராக்கியை ஆணின் கையில் கட்டுவார்கள். அதேபோல், அந்த பெண்ணின் நலனை காக்கும் சகோதரனாக ஆண் மனதில் உறுதி எடுத்துக் கொள்வார்கள். இந்த பண்டிகை வடமாநிலங்களில் வெகு விமரிசையாக கொண்டாடப்படும்.
இந்நிலையில், பாகிஸ்தானைச் சேர்ந்த பெண் ஒருவர் பிரதமர் நரேந்திர மோடிக்கு ராக்கி அனுப்பி தனது ரக்ஷாபந்தன் வாழ்த்தை தெரிவித்துள்ளார். மேலும், பிரதமர் மோடி 2024 மக்களவைத் தேர்தலில் வெற்றி பெற வாழ்த்தும் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் கூறுகையில், “இந்த ராக்கியை ரேஷ்மி ரிப்பன் மூலம் என் எம்ப்ராய்டரி டைசன் மேற்கொண்டு எனது கையாலேயே தயாரித்தேன். மேலும் பிரதமர் மோடி உடல் நலத்துடன் நீண்ட காலம் வாழ வேண்டும் என வாழ்த்தி கடிதம் எழுதியுள்ளேன். அடுத்த முறையும் அவர் தான் நாட்டின் பிரதமராக வருவார் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. அவர் அதற்கு தகுதியானவர். அனைத்து முறையும் அவர் வெற்றி பெற்று நாட்டின் பிரதமராக இருக்க வேண்டும் என்பதே என் விருப்பம். டெல்லி வரும் போது அவரை நேரில் சந்திப்பேன் என நம்புகிறேன்” என்றார்.
முன்னதாக ரக்ஷாபந்தன் பண்டிகையை ஒட்டி பாஜக ஆளும் மாநிலங்களான உத்தரகாண்ட், ஹரியானா, உத்தரப் பிரதேசம் ஆகியவை பெண்களுக்கு இலவச பேருந்து பயணத் திட்டத்தை அறிவித்துள்ளன.