காணாமல் ஆக்கப்பட்டவர்கள் போராட்டத்திற்கு கட்சி பேதமின்றி ஆதரவு தர கோரிக்கை

ஆகஸ்ட் 30ம் திகதியன்று, சர்வதேச காணாமல் ஆக்கப்பட்டோர் தினத்தை முன்னிட்டு வடக்கு – கிழக்கில் கவனயீர்ப்பு முன்னெடுக்கவுள்ள போராட்டங்களுக்கு ஆதரவு வழங்குமாறு வவுனியா மாவட்டக் காணாமல் ஆக்கப்பட்டோரின் சங்கத்தின் தலைவி சரோஜினி சண்முகம் தெரிவித்தார்.
வவுனியாவில் தமிழ் ஊடகவியலாளர் சங்கத்தில் நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். இது தொடர்பில் மேலும் தெரிவிக்கையில் ,
வடக்கில், யாழ். பஸ் நிலையத்தில் ஆரம்பமாகும் பேரணி, யாழ். மாவட்டச் செயலகம் வரை சென்று, அங்கு எ ஐ.நாவுக்குக் கையளிப்பதற்கான மகஜரை வழங்கவுள்ளோம்.
அதேபோன்று கிழக்கில் கல்லடி பாலத்தில் இருந்து காந்தி பூங்கா வரை சென்று அங்கும் மகஜரொன்று கையளிக்கவுள்ளோம்.
எமது போராட்டம் ஆரம்பிக்கப்பட்டு மூன்றரை வருடங்கள் முடிவடைந்துவிட்டது. இருந்தும் எமது பிள்ளைகளுக்கான முடிவுகள் இன்னும் கிடைக்கவில்லை.
இந்நிலையில் கட்சி பேதமின்றி எமது உறவுகளை கேட்டு நிற்கும் எமக்காக குரல் கொடுங்கள், என்றார்.