கவர்னரை சந்தித்த ரஜினி – அரசியலும் பேசியதாக கூறியதால் பரபரப்பு
தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவியை ரஜினிகாந்த் இன்று சந்தித்து பேசினார். இந்த சந்திப்பின்போது அரசியல் குறித்தும் பேசியதாக ரஜினிதெரிவித்திருப்பதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
நடிகர் ரஜினிகாந்த் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவியை இன்று சந்தித்து பேசினார். கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகையான ராஜ் பவனில் இந்த சந்திப்பு நிகழ்ந்தது. இந்த சந்திப்பின்போது பல்வேறு விசயங்கள் குறித்து அவர்கள் பேசியதாக கூறப்படுகிறது. சுமார் 30 நிமிடங்களுக்கு மேலாக இந்த சந்திப்பு நடைபெற்றது.
இதை தொடந்து சென்னை போயஸ் கார்டன் இல்லத்தில் நடிகர் ரஜினிகாந்த் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர், ஆளுநருடன் உடனான சந்திப்பு என்பது மரியாதை நிமித்தமானது. காஷ்மீரில் பிறந்து வட மாநிலங்களிலேயே இருந்த ஆளுநர், தமிழ்நாட்டை மிகவும் நேசித்துள்ளார். தமிழர்களின் நேர்மை, கடின உழைப்பு ஆகியவை ஆளுநரை மிகவும் கவர்ந்துள்ளது. இங்குள்ள ஆன்மிக உணர்வு அவரை இழுத்துள்ளது.
தமிழகத்தின் நன்மைக்காக எதை செய்யவும் தயாராக உள்ளேன் என ஆளுநர் கூறியதாக தெரிவித்தார். ஆளுநருடனான சந்திப்பின்போது அரசியல் குறித்து பேசியதாகவும் அதனை வெளியில் கூற முடியாது எனவும் ரஜினிகாந்த் தெரிவித்தார். அரசியலுக்கு வரும் எண்ணம் இல்லை என்றும் அவர் குறிப்பிட்டார்.
பால், தயிர் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களுக்கு ஜிஎஸ்டி வரி உயர்த்தப்பட்டுள்ளது குறித்து கருத்து தெரிவிக்க அவர் மறுத்துவிட்டார். ஜெயிலர் திரைப்படத்தி படப்பிடிப்பு ஆகஸ்ட் 15ம் தேதி அல்லது 25ம் தேதி தொடங்கும் என்றும் ரஜினிகாந்த் கூறினார்.
டெல்லிக்கு சமீபத்தில் சென்ற ரஜினிகாந்த் அங்கு முக்கிய அரசியல் தலைவர்களையும் சந்தித்து பேசியுள்ளார். சென்னை வந்த பின்னர் அவர் தமிழக கவர்னரை சந்தித்து பேசியிருப்பது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இருப்பினும் தனக்கு அரசியலுக்கு வரும் எண்ணம் ஏதும் இல்லை என்பதை ரஜினி மீண்டும் தெளிவுபடுத்தியுள்ளார்.