மயிலாடுதுறை ஸ்ரீ அக்னீஸ்வரர் கோவிலுக்கு குடமுழுக்கு நடத்தப்படும் – அறநிலையத் துறை உத்தரவாதம்

மயிலாடுதுறை ஸ்ரீ அக்னீஸ்வரர் கோவிலுக்கு அடுத்த ஆண்டு பிப்ரவரி மாதத்திற்குள் குடமுழுக்கு நடத்தப்படும் என அறநிலையத் துறை சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் உத்தரவாதம் அளிக்கப்பட்டுள்ளது.

மயிலாடுதுறை மாவட்டம், தரங்கம்பாடி, நல்லாடை என்னுமிடத்தில் உள்ள பரணி நட்சத்திர பரிகார கோவிலான சுந்தரநாயகி சமேத ஸ்ரீ அக்னீஸ்வரர் கோவில் சிதிலமடைந்திருப்பதால், சீரமைப்புப் பணிகளை மேற்கொண்டு, குடமுழுக்கு நடத்த, இந்து சமய அறநிலையத் துறைக்கு உத்தரவிடக்கோரி, சென்னையைச் சேர்ந்த வழக்கறிஞர் ஜெகன்நாத் என்பவர் உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்திருந்தார்.

இந்த வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம், சீரமைப்புப் பணிகளை மேற்கொள்ள நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டு வழக்கை முடித்துவைத்தது.

இந்த உத்தரவை அமல்படுத்தப்படவில்லை என ஜெகன்நாத் தாக்கல் செய்த நீதிமன்ற அவமதிப்பு வழக்கு நீதிபதிகள் வைத்தியநாதன் மற்றும் ஜெகதீஷ் சந்திரா முன்பு விசாரணைக்கு வந்தபோது, கோவில் செயல் அலுவலர் தாக்கல் செய்த அறிக்கையில், கோவில் நிர்வாக குழுக்களிடம் அனுமதி பெற்று குடமுழுக்கு பணிகளுக்காக ரூ.31 லட்சம் ஒதுக்கப்பட்டுள்ளதாகவும், பணிகள் தாமதமின்றி நடந்து வருவதாக தெரிவிக்கபட்டது.

மேலும், 2023 பிப்ரவரி மாதத்திற்குள் குடமுழுக்கு நடத்தப்படும் என அறிக்கையில் தெரிவிக்கபட்டது. இதை பதிவு செய்து கொண்ட நீதிபதிகள், நீதிமன்ற அவமதிப்பு வழக்கை முடித்து வைத்தனர்.

Leave A Reply

Your email address will not be published.