‘மொட்டு’விலிருந்து வெளியேறியோர் தலைமையில் புதிய கூட்டணி உதயம் ஆகஸ்ட் 21இல் அங்குரார்ப்பண நிகழ்வு.
ஶ்ரீலங்கா பொதுஜன முன்னணி தலைமையிலான கூட்டணியிலிருந்து வெளியேறிய பங்காளிக் கட்சிகள் இணைந்து புதியதொரு அரசியல் கூட்டணியை உருவாக்கியுள்ளன.
குறித்த கூட்டணியின் அங்குரார்ப்பண நிகழ்வு எதிர்வரும் 21 ஆம் திகதி இடம்பெறவுள்ளது எனவும், கூட்டணியின் பெயர் உள்ளிட்ட விவரங்கள் அன்றைய தினமே அறிவிக்கப்படும் எனவும் ஜனநாயக இடதுசாரி முன்னணியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான வாசுதேவ நாணயக்கார தெரிவித்தார்.
விமல் வீரவன்ச தலைமையிலான தேசிய சுதந்திர முன்னணி, வாசுதேவ நாணயக்கார தலைமையிலான ஜனநாயக இடதுசாரி முன்னணி, உதய கம்மன்பில தலைமையிலான புதிய ஹெள உறுமய, இலங்கை கம்யூனிஸ் கட்சி, லங்கா சமசமாஜக்கட்சி, யுதுகம அமைப்பு, எமது மக்கள் சக்தி உட்பட மேலும் சில கட்சிகளும், தேசியவாத அமைப்புகளும் கூட்டணியில் இணைகின்றன.
இது தொடர்பான விசேட கலந்துரையாடலொன்று நேற்றிரவு கொழும்பில் நடைபெற்றது. இதன்போதே கூட்டணி தொடர்பான விவரத்தை எதிர்வரும் 21ஆம் திகதி வெளியிடுவதற்குத் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
ஶ்ரீலங்கா பொதுஜன முன்னணியில் இருந்து விலகி சுயாதீனமாகச் செயற்படும் டலஸ் அழகப்பெரும தலைமையிலான குழுவினரையும் புதிய கூட்டணியில் இணைத்துக்கொள்வதற்கான முயற்சிகள் இடம்பெறுகின்றன. எனினும், இது தொடர்பில் இன்னும் இறுதி முடிவு எட்டப்படவில்லை.
அத்துடன், முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையிலான ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சியும் புதிய கூட்டணியில் இணையக்கூடும் எனத் தகவல் வெளியாகியிருந்தாலும், அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகவில்லை. சுதந்திரக் கட்சி தனிவழி செல்வதற்கான சாத்தியமே அதிகம் என அக்கட்சி வட்டாரங்களில் இருந்து அறியமுடிகின்றது. எனினும், தேர்தல் கால கூட்டணிக்கு பச்சைக்கொடி காட்டும் சாத்தியம் உள்ளது.
டிரான் அலஸ் மற்றும் அதாவுல்லாவின் கட்சிகள் ஆரம்பத்தில் 10 கட்சிகளின் சுயாதீனக் கூட்டணியில் இருந்தாலும், தற்போது அரசுக்கு ஆதரவளித்து கூட்டணியிலிருந்து விலகிவிட்டன.