இலங்கை சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள தென்னிந்திய ஊடகவியலாளர்கள்!
இலங்கையின் சுற்றுலாத்துறையினை வலுப்படுத்துவதற்காக இலங்கை சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள தென்னிந்திய ஊடகவியலாளர்கள்!
சென்னையில் உள்ள இலங்கை துணை உயர்ஸ்தானிகராலயம் மற்றும் இலங்கை சுற்றுலா மேம்பாட்டு பணியகத்தினால் இலங்கையின் சுற்றுலாத்துறையினை வலுப்படுத்தும் நோக்கில், “The Murugan Trail” எனும் புண்ணிய ஸ்தலங்களை தரிசிக்கும் யாத்திரையொன்று தென்னிந்திய ஊடகங்களுக்கென பிரத்தியேகமாக ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இந்த நிகழ்ச்சியின் முக்கிய நோக்கமானது, பௌத்தர்களின் புனித மாதமான எசல மாதத்தில் நடைப்பெறும் கதிர்காம எசல பெரஹராவினை (திருவிழா) தென்னிந்திய சுற்றுலாப்பயணிகள் மத்தியில் பிரபல்யப்படுத்துவதேயாகும்.
கதிர்காமத்தில் உள்ள முருகன் கோவிலில், ஆண்டுதோறும் ஜூலை அல்லது ஆகஸ்ட் மாதத்தில் அதன் திருவிழா இடம்பெறும் அதே நேரம், கண்டி எசல பெரஹரா மற்றும் யாழ்ப்பாணம் நல்லூர் கந்தசாமி கோவிலின் மகோற்சவமும் இடம்பெறுவதால், பக்தர்கள் இந்த மூன்று புண்ணிய ஸ்தலங்ககளுக்கும் யாத்திரை சென்று தரிசனங்களை மேற்கொள்வது வழக்கமாகும்.
கதிர்காமத்தில் நடைபெறவுள்ள எசல திருவிழாவில், பாரம்பரிய கண்டிய நடனம், யானைகளின் ஊர்வலம், காவடியாட்டம், தீ மிதிக்கும் நிகழ்வு, உட்பட இலங்கைக்கே உரிய பல்வேறு கலை கலாச்சாரம் சார்ந்த கண்கவர் நிகழ்ச்சிகள் மற்றும் பாரம்பரிய மத அனுஷ்டானங்களும் இடம்பெறும்.
முதல் முறையாக தென்னிந்தியாவில் உள்ள ஆறு புகழ்பெற்ற ஊடகங்கலான “தி இந்து” ‘Behindwoods’, ‘News 07 தமிழ்”, விகடன், “News18” “TV 09” மற்றும் மதுரை டிஜிடல் மீடியா போன்ற ஊடகங்களை பிரதிநிதித்துவப்படுத்தும் ஊடகவியலாளர்கள், 09 நாட்கள் விஜயமாக ஆகஸ்ட் 03 ஆம் திகதி இலங்கை வந்துள்ளனர்.
இந்த விஜயத்தின் போது, நாடு முழுவதிலும் குறிப்பாக கொழும்பு, யாழ்ப்பாணம், அனுராதபுரம், தம்புள்ளை, கண்டி மற்றும் கதிர்காமம் ஆகிய இடங்களில் உள்ள வரலாற்று மற்றும் கலாச்சார முக்கியத்துவம் வாய்ந்த இடங்கள் மற்றும் திருவிழாக்களை பார்வையிட இக்குழுவினர் திட்டமிட்டுள்ளதுடன், கதிர்காமத்தில் நடைபெறவுள்ள எசல திருவிழாவினை நேரடி ஒளிபரப்பபு செய்ய சில ஊடகங்கள் திட்டமிடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.