இலங்கையின் கோரிக்கையை சிங்கப்பூர் நிராகரித்ததா? கோட்டா நாளை தாய்லாந்துக்கு …
முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச நாளை தாய்லாந்து செல்ல திட்டமிட்டுள்ளதாக ராய்ட்டர்ஸ், செய்தி வெளியிட்டுள்ளது.
மக்கள் போராட்டங்கள் காரணமாக கடந்த 14ஆம் திகதி மாலைத்தீவு வழியாக சிங்கப்பூருக்குத் தப்பிச் சென்ற கோத்தபாய ராஜபக்சவுக்கு சிங்கப்பூர் வழங்கிய வீசாவை நீடிக்க விண்ணப்பம் செய்திருந்த போதிலும் அது சாத்தியப்படவில்லை என தெரிகிறது.
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க சிங்கப்பூர் அதிகாரிகளை அழைத்து அவரது தங்கும் காலத்தை நீடிக்குமாறு கோரியுள்ளதாகவும் ஊடகங்கள் தெரிவித்திருந்தன.
இதேவேளை ராஜபக்ச கட்சியினரது ஆதரவினால் ஜனாதிபதியான ரணில் விக்ரமசிங்க, முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய எதிர்காலத்தில் இலங்கைக்கு திரும்புவதைத் தவிர்க்க வேண்டும் என முன்னர் சுட்டிக்காட்டியிருந்தார்.
ஜூலை 31 அன்று வோல் ஸ்ட்ரீட் ஜேர்னலுக்கு அளித்த பேட்டியில், “அவர் திரும்பி வருவதற்கான நேரம் இது என்று நான் நம்பவில்லை,” என்று விக்கிரமசிங்க கூறினார். மேலும் “அவர் விரைவில் திரும்பி வருவதற்கான எந்த அறிகுறியும் என்னிடம் இல்லை.” என்றார் அவர்.
முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய இலங்கைக்கு திரும்பினால், அவருக்கு எதிராக ஏதேனும் குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்பட்டால், அவருக்கு சட்டத்தின் கீழ் பாதுகாப்பு கிடைக்காது என சட்ட நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.