ரஞ்சன் விடுதலையாக தடையாக இருப்பது என்ன? (வீடியோ)
முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்க, நீதித்துறை தொடர்பில் தாம் தெரிவித்த கருத்துக்கு வருத்தம் தெரிவித்து பிரமாணப் பத்திரம் ஒன்றைக் கொடுத்த பின் , அவருக்கு ஜனாதிபதி மன்னிப்பு வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக நீதியமைச்சர் விஜேதாச ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
அந்த நிபந்தனையுடன் நீதி அமைச்சினால் இது தொடர்பான பரிந்துரைகள் ஜனாதிபதியிடம் ஏற்கனவே சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
ரஞ்சன் ராமநாயக்க கொலை அல்லது வேறு எந்த குற்றச் சாட்டுக்களுக்காகவும் தண்டிக்கப்படவில்லை என்பதால், சட்டமா அதிபரின் ஆலோசனையைப் பெற வேண்டிய அவசியமில்லை என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
சிறைச்சாலைகள் ஆணையாளரிடம் இருந்து அழைக்கப்பட்ட அறிக்கையின் பிரகாரம் நன்னடத்தை பற்றிய உண்மைகளை கருத்திற்கொண்டு நிபந்தனைக்குட்பட்டு ரஞ்சன் ராமநாயக்கவை விடுதலை செய்யுமாறு ஜனாதிபதிக்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளதாக நீதியமைச்சர் தெரிவித்தார்.
“இந்த தண்டனை அரசியல் பிரச்சினை தொடர்பாக வழங்கப்படவில்லை. நீதிமன்ற அவமதிப்பு குற்றத்திற்காக இந்த தண்டனை வழங்கப்பட்டுள்ளது. எனவே, இது போன்ற ஒரு விஷயத்தில் அவர் நீண்ட காலமாக தண்டிக்கப்பட்டுள்ளார். அவர் நன்னடத்தையுடையவராக இருப்பதாலும், சமுதாயத்திற்கு சில நல்ல பங்களிப்பைச் செய்யக்கூடியவராக இருப்பதாலும், இந்த நேரத்தில் அவரை மன்னிப்பது மிகவும் நியாயமானது என்று நாங்கள் நம்புகிறோம். ஆனால், நமது நீதித்துறையை எந்த வகையிலும் குறைத்து மதிப்பிடப்படாத வகையில் நாம் அதைச் செய்ய வேண்டும்.
எனவே, நீதித்துறை தொடர்பில் அவர் தெரிவித்த கருத்து தொடர்பில் வருத்தம் தெரிவித்து நீதிமன்றில் பிரமாணப் பத்திரம் வழங்கிய ஜனாதிபதி அவருக்கு மன்னிப்பு வழங்குவதே பொருத்தமானது என நாம் கருதுகிறோம். இன்னும் சில நாட்களில் அது நிறைவேறும் என்று நினைக்கிறேன். ”
என்று நீதி அமைச்சர் தெரிவித்துள்ளார்.