இலவசங்களை அறிவிக்கும் கட்சிகளின் அங்கீகாரங்களை ரத்து செய்ய முடியாது – உச்ச நீதிமன்றம்

இலவசங்களை அறிவிக்கும் கட்சிகளின் அங்கீகாரத்தை ரத்து செய்ய முடியாது என உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது.
மாநில அரசுகள் இலவசங்கள் வழங்குவதற்கு எதிர்ப்பு தெரிவித்து தொடரப்பட்ட வழக்கில், இலவசங்கள் வழங்குவதன் நன்மை தீமைகள் குறித்து ஆய்வு செய்ய நிபுணர் குழு ஒன்றை அமைக்கலாம் என, தலைமை நீதிபதி அடங்கிய அமர்வு தெரிவித்தது. அதில் மத்திய அரசு, மாநில அரசுகள், அனைத்து அரசியல் கட்சிகள், நிதி ஆணையம், நிதி ஆயோக், தேர்தல் ஆணையம் உள்ளிட்டோர் இடம்பெறலாம் என்றும் கூறியது.
இந்த வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்தபோது, தேர்தல் ஆணையம் பதில் மனுதாக்கல் செய்திருப்பதாகத் தெரிவித்தது. ஆனால், பிரமாணபத்திரம் தாங்களுக்கு கிடைக்கவில்லை எனவும், செய்தித்தாளில் படித்து தெரிந்துகொண்டதாகவும் தலைமை நீதிபதி அதிருப்தி தெரிவித்தார். அந்த பிரமாணப்பத்திரத்தில், தேர்தல் ஆணையம் சுதந்திரமான அரசியல் சாசன அமைப்பு என்பதால் நிபுணர் குழுவில் பங்கேற்க விரும்பவில்லை எனவும், தேர்தல் ஆணையம் தெரிவிக்கும் கருத்துக்கள் தேர்தல்களில் பாதிப்பை ஏற்படுத்தலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இலவச திட்டங்களால் அதிக செலவாகிறது என மத்திய அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது. ஆனால், தற்போதைய சூழலில் விவசாயம் உள்ளிட்ட துறைகளில் ஏழைகளுக்கு, இலவச சலுகை கட்டாயம் தேவை என மூத்த வழக்கறிஞர் கபில்சிபல் வாதிட்டார். தொடர்ந்து நிதிச் செலவு, நலத்திட்டங்கள் இரண்டும் சமநிலையில் இருக்கவேண்டும் எனவும், நீதிமன்றம் அமைக்க உள்ள நிபுணர் குழு அனைத்து அம்சங்களையும் ஆய்வு செய்யலாம் என்றும் நீதிபதிகள் தெரிவித்தனர்.
இலவசங்களை அறிவிக்கும் கட்சிகளின் அங்கீகாரத்தை ரத்து செய்யவும், இலவசங்களை தடுக்க சட்டம் இயற்றவும் உத்தரவிட முடியாது என கூறி, வழக்கு விசாரணையை வரும் 17ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.