மக்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளை தீர்க்குமாறு ஜனாதிபதியிடம் மக்கள் காங்கிரஸ் எழுத்துமூல ஆவணம் கையளிப்பு.
‘ஒரே நாடு, ஒரே சட்டம்’ என்ற செயலணியின் அறிக்கையை நடைமுறைப்படுத்த வேண்டாம் என ஜனாதிபதியிடம் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் விடுத்த வேண்டுகோளுக்கு, ஜனாதிபதி உடன்பட்டுள்ளதாக அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான ரிஷாட் பதியுதீன் தெரிவித்தார்.
ஜனாதிபதி செயலகத்தில், நேற்று மாலை (10) அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைமை உட்பட கட்சியின் முக்கியஸ்தர்கள் ஜனாதிபதியை சந்தித்துக் கலந்துரையாடினர். இந்த சந்திப்பில் பிரதமரும் பங்கேற்றிருந்தார்.
ஜனாதிபதியுடன் இடம்பெற்ற கலந்துரையாடலின் பின்னர், ஊடகவியலாளர்களின் கேள்விகளுக்கு பதிலளிக்கையிலேயே, மக்கள் காங்கிரஸ் தலைவர் ரிஷாட் பதியுதீன் மேற்கண்டவாறு கூறினார்.
தொடர்ந்து பேசிய அவர்,
“முன்னாள் ஜனாதிபதியினால் ‘ஒரே நாடு, ஒரே சட்டம்’ என்ற செயலணி ஒன்று உருவாக்கப்பட்டது. எந்த வகையிலும் தகுதியற்ற ஒருவரை தலைவராகக் கொண்டு, அவருக்கு விருப்பமான முறையில் அறிக்கை ஒன்று தயாரிக்கப்பட்டு, முன்னாள் ஜனாதிபதியிடம் ஒப்படைக்கப்பட்டிருந்தது. அந்த ஆவணத்தை எந்த வகையிலும் நடைமுறைப்படுத்த வேண்டாம் என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிடம் கோரிக்கை விடுத்த போது, அவர் அதற்கு உடன்பட்டார்.
அது மாத்திரமின்றி, இந்த நாட்டில் பொருளாதாரம் சீரழிந்தமைக்கு இனவாத, மதவாத சக்திகளின் கைகள் ஓங்கியமையே பிரதான காரணம். இந்த அரசாங்கத்துக்கு முன்னர் ஆட்சியிலிருந்த ஜனாதிபதியின் தலைமையிலான அரசு, இனவாதத்தையும் மதவாதத்தையும் மூலதனமாகக் கொண்டே ஆட்சியை அமைத்தது. இனவாதத்தை பரப்புவதன் மூலமே தமது அரசியல் இருப்பை நிலைப்படுத்தலாம் எனவும் எண்ணி, தொடர்ச்சியாக இனவாத சக்திகளை வளரவிட்டனர். அதனால்தான், இந்த நாடு குட்டிச்சுவராகி, ‘கியூ’ யுகத்திற்கு தள்ளப்பட்டிருக்கிறது. எனவே, இந்த நாட்டை கட்டியெழுப்புவதாக இருந்தால், இனவாத, மதவாத சக்திகளின் கைகள் ஓங்கவிடாமல் தடுக்க வேண்டும். பாதுகாக்க வேண்டும் என்பதை நாம் ஜனாதிபதியிடம் சுட்டிக்காட்டினோம்.
எதிர்காலத்தில், சர்வகட்சிகளையும் இணைத்து அரசு முன்னெடுத்துச் செல்லவுள்ள வேலைத்திட்டத்திற்கு, எமது கட்சியின் ஒத்துழைப்பையும் ஜனாதிபதி வேண்டிய போது, ஏனைய கட்சிகளோடு சேர்ந்து, ஒரு பொதுவான வேலைத்திட்டத்திற்காக நாட்டு நலனை முன்னிறுத்தி, பூரண ஒத்துழைப்பை வழங்குவோம் என நாம் உறுதியளித்தோம்.
தற்போது பாராளுமன்றத்தில் 22ஆவது திருத்தம் சமர்ப்பிக்கப்பட்ட நிலையில், எந்த ஒரு அரசியல் சீர்திருத்தத்திலும் கட்சிகளின் நலனுக்கப்பால், நாட்டு நலனை முன்னிறுத்தி அதனைக் கொண்டுவர வேண்டும் என நாம் தெரிவித்தோம்.
நாட்டு மக்கள் எதிர்நோக்கும் பல்வேறுபட்ட பிரச்சினைகளை தீர்த்து வைக்க வேண்டியதன் அவசியத்தையும் நாம் இதன்போது வலியுறுத்தினோம். குறிப்பாக, மன்னார் – புத்தளம் பாதையை திறத்தல், வடக்கு, கிழக்கு மாகாணங்களில் வனவளத் திணைக்களம், வன ஜீவராசிகள் திணைக்களம், தொல்பொருளியல் திணைக்களம் ஆகியவற்றினால் கையகப்படுத்தப்பட்டுள்ள மக்களின் பூர்வீகக் காணிகளை விடுவித்து, அவற்றை மக்களின் பயன்பாட்டுக்கு உடனடியாக வழங்க நடவடிக்கை எடுக்குமாறு கோரினோம்.
அத்துடன், தாமதமடைந்துள்ள இடம்பெயர்ந்த மக்களின் மீள்குடியேற்றத்தை துரிதப்படுத்த வேண்டியதன் அவசியத்தையும் இங்கு வலியுறுத்தினோம்.
விவசாயிகளுக்கும், கடற்றொழிலாளர்களுக்கும் தமது தொழிலை சிரமமின்றி மேற்கொள்வதற்காக, அவர்களுக்கு தேவையான எண்ணெய் வசதிகளை வழங்குமாறு வேண்டிக்கொண்டோம்.
மக்களுக்கு தேவையான அத்தியாவசிய பொருட்களின் தட்டுபாடு மற்றும் கட்டுப்பாட்டு விலையின்றி மக்கள் எதிர்நோக்கும் சிரமங்கள் தொடர்பில் எடுத்துக்கூறியதுடன், பொதுமக்களுக்கு அத்தியாவசிய பொருட்கள் தங்குதடையின்றிக் கிடைக்க ஆவன செய்யுமாறும் கோரினோம்.
மேலும், அவசராகாலச் சட்டத்தை தொடர்ந்தும் நீடிக்க வேண்டாமென வலியுறுத்தியதுடன், ஏற்கனவே, பயங்கரவாத தடுப்புச் சட்டத்தன் (PTA) கீழ் அநியாயமாகக் கைது செய்யப்பட்டு இன்னும் சிறையில் இருப்பவர்களை அவசரமாக விடுதலை செய்யுமாறும், சிறிய சிறிய காரணங்களுக்காக போராட்டக்காரர்களை அநியாயமாகக் கைது செய்வதையும், பழிவாங்குவதையும் உடன் நிறுத்த வேண்டுமெனவும் வேண்டுகோள்விடுத்தோம்.
இதேபோன்று, தற்போதைய நெருக்கடியான சூழலில் மக்கள் எதிர்நோக்கும் பல முக்கியமான பிரச்சினைகளை எடுத்துரைத்து, அவற்றுக்கான தீர்வுகளை பெற்றுத் தருமாறு கோரிக்கை விடுத்தோம். அத்துடன், மக்கள் நலன் குறித்த இன்னும் பல முக்கிய விடயங்கள் அடங்கிய, எழுத்து மூலமான ஆவணம் ஒன்றை ஜனாதிபதியிடம் கையளித்ததோடு, அவற்றை துரிதகதியில் நடைமுறைப்படுத்தித் தருமாறும் வேண்டுகோள் விடுத்தோம்” என்று கூறினார்.