முடித்துக் கொள்கிறோம்… சீனா அறிவிப்பால் உலக நாடுகள் நிம்மதி.
தைவான் எல்லையில் போர் ஒத்திகையை முடித்துக் கொள்வதாக சீனா அறிவித்துள்ளதுடன், வழக்கமான ரோந்துப் பணிகளைத் திட்டமிட்டு வருவதாக கூறியுள்ளது.
தைவான் எல்லையில் திடீரென்று தீவிர போர் ஒத்திகையில் ஈடுபட்டது சீனா. அமெரிக்க நாடாளுமன்ற சபாநாயகர் நான்சி பெலோசி தைவான் வந்ததற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் இந்த நடவடிக்கையை சீனா முன்னெடுத்தது.
அதிநவீன ஏவுகணையை ஏவி கடும் போர் ஒத்திகையில் ஈடுபட்டது. குறித்த பயிற்சியானது ஞாயிற்றுக்கிழமை முடியும் என சீனா அறிவித்திருந்தது. ஆனால் அதன் பின்னரும் ஒத்திகையை நீட்டித்து வந்தது.
பதிலுக்கு தைவானும் பீரங்கி பயிற்சியை முன்னெடுத்தது. மட்டுமின்றி, சீனா போர் தொடுத்தால், அதை எதிர்கொள்ள தயாராக இருப்பதாவும் தைவான் ராணுவம் பதிலடி அளித்திருந்தது.
இந்த நிலையில், இரண்டு நாடுகளுக்கும் இடையே வரும் நாட்களில் மோதல் அதிகரிக்கும் என்றே எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், ராணுவ பயிற்சிகளை முடித்துக் கொள்வதாக சீனா அறிவித்துள்ளது.
இது தொடர்பில் சீன ராணுவம் வெளியிட்ட அறிக்கையில், இராணுவ பயிற்சிகள் வெற்றிகரமாக முடிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து தைவான் எல்லையில் வழக்கமான ரோந்துப் பணிகளை நடத்த திட்டமிட்டு வருகிறோம் என்று குறிப்பிட்டுள்ளது.
சீனாவின் இந்த அறிவிப்பு மூலம் கடந்த ஒருவாரமாக நீடித்த போர் பதற்றம் முடிவுக்கு வந்திருக்கிறது. மட்டுமின்றி, கடந்த சனிக்கிழமையே தைவான் வணிகக் கப்பல்களை அனுமதிக்கும் நடவடிக்கையையும் முன்னெடுத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.