மீண்டும் இலங்கை நோக்கி திரும்பியது சீன உளவு கப்பல்!

எந்த துறைமுகத்திற்கும் செல்லாமல் தொடர்ந்து 28 நாட்கள் கப்பல் பயணிக்கிறது!
யுவான் வாங் 5 என்ற சீன உயர் தொழில்நுட்ப ஆராய்ச்சி மற்றும் கண்காணிப்புக் கப்பல் இன்று (11) அம்பாந்தோட்டை துறைமுகத்தை வந்தடையத் திட்டமிடப்பட்டிருந்தது,
ஆனால் அது தற்போது இலங்கையில் இருந்து 600 கடல் மைல் தொலைவில் இந்தியப் பெருங்கடலில் பயணிக்கிறது.
இது தொடர்பில் நாம் வினவியபோது, குறித்த கப்பல் இன்று இலங்கைக்கு வராது என ஹார்பர் மாஸ்டர் தெரிவித்தார்.
தனது அனுமதியின்றி ஹம்பாந்தோட்டை துறைமுகத்திற்குள் எந்த கப்பலும் பிரவேசிக்க முடியாது எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
சீனக் கப்பல் இலங்கைக்கு வருவதைத் தாமதப்படுத்துமாறு வெளிவிவகார அமைச்சு அறிவித்துள்ள போதிலும், துறைமுகத்திற்கு வருவதற்கு அனுமதி வழங்கப்படுமா இல்லையா என்பது இதுவரையில் அறிவிக்கப்படவில்லை.
சீன உயர் தொழில்நுட்பக் கப்பல் யுவான் வாங் 5 , ஜூலை 14 அன்று சீனாவிலிருந்து புறப்பட்டது, அது பயணத்தை தொடங்கியதிலிருந்து எந்தவொரு துறைமுகத்திலும் நுழையவில்லை.
அதன்படி, கப்பல் எந்தவொரு துறைமுகத்திற்குள்ளும் நுழையாமல் எரிபொருள் அல்லது உணவை நிரப்பாமல் 28 நாட்கள் தொடர்ந்து பயணிக்கிறது.
ஜூன் 28ஆம் திகதி சீனத் தூதரகம் விடுத்த கோரிக்கையின் பிரகாரம், ஜூலை 12ஆம் திகதி இந்தக் கப்பலை ஹம்பாந்தோட்டை துறைமுகத்திற்கு வருவதற்கு வெளிவிவகார அமைச்சு அனுமதி வழங்கியிருந்தது.
ஆனால் கடந்த 8ம் தேதி வெளியுறவு அமைச்சகம் சீன தூதரகத்திற்கு கடிதம் அனுப்பி , கப்பலை தாமதப்படுத்துமாறு கூறியதுடன், அதற்குள் அவர்கள் இந்திய பெருங்கடலுக்குள் நுழைந்துவிட்டனர்.
கப்பலை தாமதப்படுத்துமாறு கோரியதற்கான சரியான காரணத்தை வெளிவிவகார அமைச்சு வெளியிடவில்லை என்பதுடன், குறித்த கப்பல் தமது நாட்டின் பாதுகாப்பிற்கு பாரிய அச்சுறுத்தலாக உள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
ஆனால் இது தொடர்பில் கருத்து தெரிவிப்பதைத் தவிர்ப்பதற்கு இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகராலயம் தீர்மானித்துள்ளதாக நேற்றைய தினம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நேற்று இலங்கைக்கு வரும் பாதையை விட்டு அகன்று செல்லத் தொடங்கிய சீன உயர் தொழில்நுட்ப ஆராய்ச்சி மற்றும் கண்காணிப்புக் கப்பலான யுவான் வாங் 5 , இன்று மீண்டும் திரும்பி இலங்கையை நோக்கிப் பயணித்துக்கொண்டிருக்கிறது.
ஆனால், இந்தக் கப்பல் இலங்கைக்கு கிழக்கே வங்காள விரிகுடாவை நோக்கி நகர்வதாக உள்ளது.
இலங்கைக்கு அருகாமையில் அமைந்துள்ள பத்தொன்பதாம் முகடு எனப்படும் கடற்பரப்பில் மலைத்தொடரின் மேற்பரப்பில் கப்பல் பயணிப்பதை AIS தரவுகளில் காணலாம்.
இலங்கையில் அம்பாந்தோட்டை துறைமுகத்தை நோக்கி பயணித்த யுவான் வாங் 5, முந்தைய இரவில் இருந்து தனது போக்கை மாற்றிக்கொண்டது, பின்னர் பத்தொன்பதாம் ரிட்ஜ் மலைத்தொடர் பகுதி ஊடாக மிகக் குறைந்த வேகத்தில் உயர்ந்து மேற்பரப்பில் மேலும் கீழும் மாறி மாறி பயணிப்பதை அவதானிக்க முடிந்தது.
சீனா கடந்த இரண்டு ஆண்டுகளாக சியாங் யாங் ஹாங் வகை செயற்கைக்கோள் கண்காணிப்பு கப்பல்களைப் பயன்படுத்தி இந்த பகுதியில் ஆய்வுகளை மேற்கொண்டு வருகிறது.
இதற்கிடையில், சீனாவில் இருந்து தனது முதல் பயணத்தை தொடங்கியுள்ள போர்க்கப்பலான தைமூர், பாகிஸ்தான் கடற்படையின் கடற்படையுடன் இணைந்து கொள்வதற்காக நாளை (12) கொழும்பு துறைமுகத்தை வந்தடையும் என்று ஹார்பர் மாஸ்டர் உறுதிப்படுத்தினார்.
அண்மைய நாட்களில் இந்தக் கப்பல் இலங்கைக்கு வருவதை இந்தியா உன்னிப்பாக கவனித்திருந்தது.
நாட்டின் துறைமுகத்திற்குள் நுழைய அனுமதி கேட்ட தைமூர் கப்பலின் கோரிக்கையை பங்களாதேஷ் நிராகரித்தது, அதன் பின்னர் அது கொழும்பு வந்தடையும் என தெரிவிக்கப்பட்டது.