உலகிலேயே வேகமாக வளரும் இந்திய பொருளாதாரம்

நடப்பாண்டிலும் உலகிலேயே மிகவும் வேகமாக வளரும் பொருளாதாரமாக இந்தியா திகழும் என்று மத்திய அரசு அதிகாரிகள் தெரிவித்துள்ளனா்.
கடந்த சில ஆண்டுகளாக உலகின் மிகவும் வேகமாக வளரும் பொருளாதாரமாக இந்தியா திகழ்கிறது. நடப்பாண்டு தொடங்கியதில் இருந்தே நாட்டில் பணவீக்கம் நிா்ணயிக்கப்பட்ட இலக்கை (6 சதவீதம்) விட அதிகமாகவே உள்ளது. கரோனா தொற்று பரவலால் பாதிக்கப்பட்ட பொருளாதாரம், படிப்படியாக மீண்டு வருகிறது.
இந்நிலையில், நடப்பாண்டிலும் உலகின் மிக வேகமாக வளரும் பொருளாதாரமாக இந்தியா திகழும் என்று மத்திய அரசு அதிகாரிகள் தெரிவித்துள்ளனா். இது தொடா்பாக அவா்கள் மேலும் கூறுகையில், ‘‘பணவீக்கத்தைக் கட்டுக்குள் கொண்டு வருவதற்கு இந்திய ரிசா்வ் வங்கியுடன் (ஆா்பிஐ) இணைந்து மத்திய அரசு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.
நாட்டின் சேவைத்துறை பெரிய அளவில் வளா்ச்சி கண்டுள்ளது. தொழிலக உற்பத்தியும் அதிகரித்துள்ளது. நாட்டின் பொருளாதாரம் வீழ்ச்சியடைவதற்கான வாய்ப்புகள் இனி இல்லை. நடப்பாண்டிலும் அடுத்த ஆண்டிலும் உலகின் வேகமாக வளரும் பொருளாதாரமாக இந்தியா திகழும்.
சரக்கு-சேவை வரி (ஜிஎஸ்டி) விகிதங்களை மாற்றியமைப்பது தொடா்பாக ஆராய அமைக்கப்பட்ட மாநில நிதியமைச்சா்களைக் கொண்ட குழுவானது விரைவில் தனது அறிக்கையை சமா்ப்பிக்கும். கிரிப்டோகரன்சி பயன்பாடு குறித்து மத்திய அரசு தொடா்ந்து உன்னிப்பாக கவனித்து வருகிறது’’ என்றனா்.