ரணிலின் சர்வகட்சி அரசு வலையில் விலைபோகக்கூடியவர்கள் சிக்குவர் இப்படிக் கூறுகின்றது ஜே.வி.பி.
“ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க விரித்துள்ள சர்வகட்சி அரசு எனும் வலையில், விலைபோகும் சில அரசியல்வாதிகள் நிச்சயம் வீழ்வார்கள்.”
இவ்வாறு ஜே.வி.பியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சுனில் ஹந்துன்நெத்தி தெரிவித்தார்.
இது தொடர்பில் ஊடகங்களிடம் அவர் மேலும் கூறியதாவது:-
“தமது அணியில் இருந்து பிரிந்து சென்றவர்களை வளைத்துப் போடுவதற்காக அமைச்சுப் பதவி குறித்து ரணில் பேரம் பேசி வருகின்றார். அத்துடன், ஊழல், மோசடிகளைக் காட்டி, ‘மொட்டு’க் கட்சியினரின் ஆதரவையும் திரட்டியுள்ளார்.
உரிய நேரம் வரும்போது விமல் வீரவன்ச, உதய கம்மன்பில, ரத்தன தேரர் போன்றவர்களும் ரணிலின் பிடிக்குள் சிக்குவார்கள். ஆளுங்கட்சி பக்கம் சாய்ந்துவிட வேண்டும் என்பதே அவர்களின் நோக்கமும்கூட.
இப்படியான அரசியல் நிகழ்ச்சி நிரல் கொண்ட அரசில் நாம் எப்படி இணைவது? எந்த அடிப்படையில் ஆதரவு வழங்குவது?” – என்று கேள்வி எழுப்பினார்.