ஐஎஃப்எஸ் நிதி நிறுவன மோசடி விவகாரம்; ரூ.1000 கோடி வரை வசூலித்துக் கொடுத்த ஏஜெண்ட் கைது
ஐ எஃப் எஸ் நிதி நிறுவன மோசடி விவகாரத்தில் ரூ.1000 கோடி வரை வசூலித்துக் கொடுத்த ஏஜெண்ட் கைது செய்யப்பட்டுள்ளார்.
வேலூரை அடிப்படையாகக் கொண்டு இன்டர்நேஷனல் பைனான்சியல் சர்வீஸ் ஐ எஃப் எஸ் என்ற நிதி நிறுவனம் செயல்பட்டு வந்தது. லட்சுமி நாராயணன், வேதநாராயணன் மற்றும் ஜனார்த்தனன் ஆகியோர் இணைந்து சென்னை, வேலூர், அரக்கோணம், திருவள்ளூர் ஆகிய பகுதிகளில் ஐ.எஃப்.எஸ் நிதி நிறுவனங்களை இயக்கி வந்துள்ளனர். ஒரு லட்ச ரூபாய் முதலீடு செய்தால் மாதம் 8000 ரூபாய் தருவதாக கவர்ச்சிகரமான விளம்பரங்கள் மூலம் மோசடியை அரங்கேற்றி வந்துள்ளனர்.
இந்த நிறுவனத்தில் பணம் கட்டி ஏமாந்த நபர்களின் அடுக்கடுக்கான புகார்களால் பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து கடந்த 5-ம் தேதி அதிரடி சோதனையில் ஈடுபட்டனர். சென்னை, வேலூர், அரக்கோணம், திருவள்ளூர் ஆகிய பகுதிகளில் ஐ.எஃப்.எஸ் நிறுவனத்திற்கு தொடர்புடைய 21 இடங்களில் அதிரடி சோதனையில் ஈடுபட்டனர்.
சோதனையில் லட்சக்கணக்கான மக்களிடம் பல்லாயிரம் கோடி ரூபாயை இந்த நிறுவனம் மோசடி செய்திருப்பது தெரியவந்தது. அதற்கான ஆவணங்களையும் பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் கைப்பற்றினர். இந்த நிலையில் லட்சுமி நாராயணன் வேத நாராயணன் மற்றும் ஜனார்த்தனன் ஆகியோர் தலைமறைவாகினர். போலீசாரின் தொடர் விசாரணையில் தற்போது வரை சுமார் ஒரு லட்சம் நபர்களிடம் ஐ.எஃப் எஸ் நிறுவனமானது ரூ.6000 கோடி வரை மோசடி செய்திருப்பது தெரியவந்தது.
இவர்கள் ஏஜெண்டுகள் மற்றும் பணியாளர்கள் அமைத்து அவர்களின் மூலம் முதலீட்டாளர்களைப் பிடித்து கோடிக்கணக்கில் பணம் பெற்று மோசடி செய்து வந்துள்ளனர். ஒவ்வொரு ஊரிலும் தனித்தனியாக ஏஜெண்டுகள் வைத்து அவர்களுக்கு கணிசமான முறையில் கமிஷனும் கொடுத்து வந்துள்ளனர் என்பது தெரியவந்தது.
இந்த நிலையில் ஐ.எஃப்.எஸ் நிறுவனம் குறித்தும் அதன் நிர்வாகிகள் குறித்தும் பொதுமக்கள் புகாரளிக்க Eowinsifscase@gmail.com என்ற மெயில் ஐடியை பொருளாதார குற்றப்பிரிவினர் வெளியிட்டு இருந்தனர். இதனையடுத்து ஐஎஃப்எஸ் நிறுவனத்திற்கு தொடர்புடைய ரூபாய் 27 கோடி சொத்து மதிப்புகள் கண்டறியப்பட்டு அவற்றை முடக்கும் பணியில் பொருளாதாரக்குற்றப்பிரிவு போலீசார் ஈடுப்பட்டு வருகின்றனர்.
இந்த நிலையில் ஐ.எஃப்.எஸ் நிதி நிறுவனம் மோசடி தொடர்பாக காஞ்சிபுரத்தைச் சேர்ந்த மின்மினி சரவணன் (எ) சரவணகுமாரை பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் கைது செய்துள்ளனர். ஐ.எஃப்.எஸ் நிறுவனத்திற்கு ஏஜென்டாக பணிபுரிந்து சுமார் ரூ.1000 கோடி வரை பொதுமக்களிடம் பணம் வசூல் செய்து சரவணகுமார் மோசடி செய்துள்ளார் என பொருளாதார குற்றப்பிரிவினர் தெரிவித்துள்ளனர்.
குறிப்பாக இந்த வழக்கில் முதல் கைது மின்மினி சரவணன் (எ) சரவணகுமார் தான். மேலும், ஐ எஃப் எஸ் நிதி நிறுவன மோசடி வழக்கில் தலைமறைவாக உள்ள மற்ற நபர்களை கைது செய்வதற்கு பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.