சீன, பாகிஸ்தான் கப்பல்கள் வருகையால் இலங்கை – இந்தியா உறவு பாதிப்பு! – துரைரெட்ணம் தெரிவிப்பு.
“இந்தியாவைப் பகைத்துக் கொள்ளும் வகையில், சீன, பாகிஸ்தான் கப்பல்கள் இலங்கைக்கு வருகை தருவது இலங்கையின் இராஜதந்திரத்துக்குக் கிடைத்த தோல்வியாகும்.”
இவ்வாறு முன்னாள் கிழக்கு மாகாண சபை உறுப்பினரும் பத்மநாபா மன்றத்தினுடைய தலைவருமான இரா. துரைரெட்ணம் தெரிவித்தார்.
இது தொடர்பில் ஊடகங்களிடம் அவர் மேலும் கூறுகையில்,
“இன்று நாடு எதிர்நோக்குகின்ற பல விடயங்களைப் பார்க்கின்றபோது இலங்கையின் இராஜதந்திர ரீதியான நடவடிக்கைகள், கடந்த காலத்துக்குரிய செயற்பாடுகள் வெற்றியளித்திருக்கின்றனவா? குறிப்பாக குறிப்பிட்ட தினங்களாகச் சீனாவின் போர்க்கப்பல் அம்பாந்தோட்டை துறைமுகத்தை நோக்கி விரைவதும், பாகிஸ்தானுடைய கப்பல் கொழும்பு வந்ததும் இலங்கையின் இராஜதந்திரத்துக்குக் கிடைத்த தோல்வியாகும்.
அருகிலுள்ள இந்திய நாட்டைப் பகைத்துக் கொண்டு இரண்டு நாட்டுக் கப்பல்களுக்கும் அனுமதி கொடுத்தது என்பது முதலாவது தவறான செயற்பாடாகும். இராஜதந்திர நடவடிக்கையில் அருகிலுள்ள நாட்டைப் பகைத்து ஒரு இராஜதந்திர ரீதியான செயற்பாடுகளை முடக்குவதென்பதே இந்த நாட்டுக்குக் கிடைத்த முதலாவது தோல்வியாகும்.
இன்றுள்ள சூழ்நிலையில், புதிய ஜனாதிபதி தெரிவு செய்யப்பட்டிருப்பதாகச் சொல்லப்படுகின்றது. ஆனால், இந்த ஜனாதிபதியைப் பொறுத்தவரையில் கடந்த காலத்தில் அம்பாந்தோட்டை துறைமுக ஒப்பந்தத்தில் கையொப்பமிட்டது மாத்திரமல்ல வடக்கு, கிழக்கின் தமிழ் அரசியல் தலைவர் சம்பந்தன் ஐயா எதிர்க்கட்சித் தலைவராக இருந்த கால கட்டத்தில்தான் இந்த ஒப்பந்தமும் கைச்சாத்திடப்பட்டது. இதனை மறந்துவிடக்கூடாது. இதனை அம்பலப்படுத்த வேண்டியப பல விடயங்கள் முடுக்கி விடப்பட்டிருந்ததன. இந்த விவகாரத்தில் இலங்கை அரசு, இனிமேலாவது இராஜதந்திர ரீதியாக இந்தியாவைப் பகைக்காமல், அருகிலுள்ள நாட்டைப் பகைக்காமல் செயற்பட வேண்டும்.
கருத்து மோதல்
மட்டக்களப்பு மாவட்ட தமிழ்த் தேசிய நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கிடையில் நடைபெறுகின்ற கருத்து மோதல் என்பது தலைமையின் பலவீனத்தைக் காட்டுகின்றது.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் இரண்டு கட்சிப் பிரதிநிதிகளின் கருத்து மோதல்களை தீர்ப்பதற்கான ஒரு களத்தை தலைமை ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும். அதை விடுத்துவிட்டு இரண்டு நாடாளுமன்ற உறுப்பினர்களும் சரி, தவறுகளைப் பொதுமக்களுக்கு மத்தியில் விவாதிப்பது ஏற்புடையதல்ல.
உடனடியாக தமிழரசுக் கட்சியும், தமிழ் ஈழ விடுதலை இயக்கமும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்குள் எழுகின்ற பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
சர்வகட்சி
அனைத்துக் கட்சிகளும் சர்வகட்சி ஆட்சி முறைக்கு பங்களிப்புச் செய்வதா? இல்லையா? என்பதில் ஒழுங்கான பதிலை இன்னமும் வழங்கவில்லை.
ஆனால், வடக்கு, கிழக்கிலுள்ள கட்சிகளைப் பொறுத்தவரையில், சர்வகட்சி முறைக்கு ஒத்துழைக்கும் பட்சத்தில் தமிழர்களின் நலன்கள் சிலவற்றைப் பாதுகாக்க முடியும் என்ற கருத்து சமூகத்தின் மத்தியில் காணப்படுகின்றது. எனவே, தமிழர் தரப்பு இதற்கு ஆதரவு தெரிவிக்கும் பட்சத்தில் எதிர்காலத்தில் தமிழர்களுடைய நலன்களைப் பாதுகாக்க முடியும்” – என்றார்.