கோட்டா வெளியேற முன் சீன உளவு கப்பல் வர அனுமதித்தாரா?
சீனாவின் விண்வெளி கண்காணிப்பு வசதிகளுடன் கூடிய யுவான் வான் 5 போர்க்கப்பலின் பாதுகாப்பு குறித்து அண்டை மாநிலங்கள் தெரிவித்த கருத்துக்களையும் கவலைகளையும் முழுமையாக பரிசீலித்து அண்டை நாடுகளின் பாதுகாப்பு மற்றும் ஒத்துழைப்பை மிக அதிக முன்னுரிமையாக கருதி அம்பாந்தோட்டைக்கு வருவதற்கு இலங்கை அரசு அனுமதி அளித்துள்ளது என இலங்கையின் வெளிவிவகார அமைச்சு தெரவித்துள்ளது.
விண்வெளி மற்றும் ஏவுகணை கண்காணிப்பு வசதிகள் கொண்ட சர்ச்சைக்குரிய சீனக் கப்பலுக்கு இலங்கைக்கு வருவதற்கான அனுமதி தொடர்பில் அறிக்கை வெளியிட்டுள்ள வெளிவிவகார அமைச்சு, சம்பந்தப்பட்ட நிறுவனங்களின் அனுமதியின் அடிப்படையில் இந்தக் கப்பலுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக மேலும் வலியுறுத்தியுள்ளது.
இலங்கையின் பிராந்திய கடற்பரப்பில் தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணைக்குழு (பிரத்தியேக பொருளாதார வலயத்திற்குள்) கப்பல் தங்கியிருக்கும் போது அதன் தானியங்கி அடையாள அமைப்பு செயலில் வைக்கப்படும் மற்றும் இந்த வரம்பிற்குள் எந்த அறிவியல் ஆராய்ச்சியும் மேற்கொள்ளப்படாது என்ற உத்தரவாதத்தின் பேரில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
கடந்த ஜூன் மாதம் எரிபொருள் நிரப்புதல் உள்ளிட்ட சேவை நடவடிக்கைகளுக்காக கப்பலை அம்பாந்தோட்டை துறைமுகத்திற்கு வருவதற்கு , இலங்கையின் சீன தூதரகம் கோரிக்கை விடுத்துள்ளதாக வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது. அனைத்து உண்மைகளையும் கருத்திற் கொண்டு நிபந்தனைகளுடன் இலங்கைக்கு வருவதற்கான அனுமதி ஜூலை 12ஆம் திகதி வழங்கப்பட்டுள்ளதாகவும் வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.
முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ , அரசுக்கு எதிரான தொடர் போராட்டங்களுக்கு இணங்கி நாட்டை விட்டு வெளியேறுவதற்கு ஒரு நாள் முன்னதாக, ஜூலை 12 ஆம் திகதி அம்பாந்தோட்டையில் கப்பலை நிறுத்துவதற்கு , முதலில் அனுமதி வழங்கியதாகத் தெரிவிக்கப்படுகிறது.
எவ்வாறாயினும், இந்தக் கப்பலின் வருகை தொடர்பில் பல்வேறு தரப்பினரும் தீவிர கவனமும் அக்கறையும் காட்டி வருவதால், மேலதிக அறிவுறுத்தல்கள் கிடைக்கும் வரை அன்றைய தினம் கப்பல் இலங்கைத் துறைமுகத்திற்குள் பிரவேசிக்காது என இலங்கை அரசாங்கம் அறிவித்துள்ளது.
எவ்வாறாயினும், இந்தக் கப்பலின் வருகை தொடர்பில் சம்பந்தப்பட்ட அனைத்து தரப்பினருடனும் நீண்ட நேரம் கலந்துரையாடியதன் பின்னர், யாருக்கும் பாதிப்பு ஏற்படாத வகையில் கப்பலை இலங்கைக்கு கொண்டு வர அனுமதி வழங்கப்பட்டதாக வெளிவிவகார அமைச்சு தனது அறிவிப்பில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.