எண்ணெய் என நினைத்து பூச்சி மருந்தை ஊற்றி சமையல் செய்து சாப்பிட்ட பெண் பலி… கணவருக்கு தீவிர சிகிச்சை
தெலங்கானா மாநிலம் கம்மம் மாவட்டத்தில் உள்ள மெடித்தப்பள்ளி கிராமத்தை சேர்ந்தவர் புல்லையா. அவருடைய மனைவி நாகம்மா சற்று மனநிலை பாதிக்கப்பட்ட நபர். நாகம்மா நேற்று மதியம் வழக்கம்போல் உணவு சமைத்துள்ளார்.
அப்போது நல்லெண்ணெய்க்கு பதிலாக பாட்டிலில் இருந்த பூச்சி மருந்தை ஊற்றி குழம்பு வைத்தார். பின்னர் பூச்சி மருந்தை பயன்படுத்தி தயார் செய்யப்பட்ட குழம்புடன் சாதத்தை கலந்து சாப்பிட்டார். அதன் பின் வயலில் வேலை செய்து கொண்டிருந்த கணவன் புள்ளையா,மகள் பல்லவி ஆகியோருக்கும் பூச்சி மருந்து கலந்த குழம்புடன் சாப்பாடு கொண்டு சென்றார்.
அப்போது மது போதையில் இருந்த புள்ளையா மனைவி கொடுத்த உணவை வாங்கி சாப்பிட்டார். உணவில் பூச்சி மருந்து நாற்றம் அடித்ததால் பல்லவி அதனை தவிர்த்து விட்டார்.
இந்த நிலையில் சற்று நேரத்தில் நாகம்மா மயங்கி விழுந்து அங்கேயே மரணம் அடைந்தார். மயங்கி விழுந்து உயிருக்கு போராடிய புள்ளையாவை உறவினர்கள் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்துள்ளனர். அங்கு அவர் ஆபத்தான நிலையில் தற்போது சிகிச்சை பெற்று வருகிறார்.
தகவல் அறிந்து அங்கு சென்ற கம்மம் காவல்துறையினர் உணவு சமைப்பதற்காக பயன்படுத்தப்பட்ட பூச்சி மருந்து பாட்டில், சமைக்கப்பட்ட உணவு ஆகியவற்றை கைப்பற்றி வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்துகின்றனர். நாகம்மா உடல் கம்மம் அரசு மருத்துவமனையில் பிரேத பரிசோதனைக்காக வைக்கப்பட்டுள்ளது. மனநலம் பாதிக்கப்பட்ட மனைவி கவனமின்றி செய்த செயலால் ஒரு குடும்பமே சிதைந்துள்ள சம்பவம் அப்பகுதியை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.