நோக்கம் நிறைவேறும்வரை நிற்காதீர்கள்’: ஆளுநர் ரவி சுதந்திர தின உரை
வளர்ச்சியிலும் மேம்பாட்டிலும், சமபங்கும் சமன்பாடும் இருப்பதை தமிழ்நாடு உறுதி செய்யவேண்டும் என்று தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி தெரிவித்துள்ளார்.
நாட்டின் 75வது சுதந்திர தினம் இன்று கொண்டாடப்பட்டு வருகிறது. டெல்லியில் உள்ள செங்கோட்டையில் பிரதமர் நரேந்திர மோடி, தேசியக் கொடியை ஏற்றி வைத்து நாட்டு மக்களுக்கு உரையாற்றினார். அதேபோன்று, சென்னை, கோட்டை கொத்தளத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், தேசியக் கொடியை ஏற்றி வைத்தார்.
75வது சுதந்திர தினத்தை முன்னிட்டு, தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என் ரவி, நேற்று (ஆகஸ்ட் 14, 2022) தமிழ்நாடு நாட்டு மக்களுக்கு உரையாற்றினார். அந்த உரையில், வீடு தோறும் தேசியக் கொடிக்கு மரியாதை செலுத்தி, வரலாறு காணாத உற்சாகத்தை மக்கள் வெளிப்படுத்தியுள்ளதாக தெரிவித்துள்ளார்.
உலகையே ஆட்டிப்படைத்த பெருந்தொற்றுக் காலத்தில், நம்முடைய மக்களின் உயிர்களைக் காப்பாற்றும் பணியில், நம்முடைய மருத்துவர்களும் செவிலியரும் பிற நலவாழ்வுப் பணியாளர்களும் அசாதாரணமான துணிவையும் ஈடுபாட்டையும் வெளிப்படுத்தியதாக தெரிவித்தார் .
ஒலிம்பிக் போட்டிகள், பாரா ஒலிம்பிக் போட்டிகள், காமன்வெல்த் விளையாட்டுகள், சதுரங்க ஒலிம்பியாட் போன்ற பன்னாட்டு விளையாட்டு நிகழ்வுகளில் மிகச் சிறப்பாகப் பங்கேற்று, நம்முடைய நாட்டுக்குப் பெருமை சேர்த்துள்ள பவானி தேவி, மாரியப்பன் தங்கவேலு, சரத் கமல், ஜோஷ்னா சின்னப்பா, தீபிகா பாலிகல், சதீஷ் சிவலிங்கம், கே. சசிகிரண், டி. குகேஷ், பி. அதிபன், ஆர். பிரக்ஞானந்தா, எஸ்.பி. சேதுராமன், கார்த்திகேயன் முரளி, ஆர். வைஷாலி ஆகிய வீரர்களையும் வீராங்கனைகளையும் எண்ணிப் பெருமிதம் அடைவதாக குறிப்பிட்டார்.
கேலோ இந்தியா இளைஞர் விளையாட்டுகளில், கைப்பந்து (வாலி பால்) போட்டிகளிலும், 4 முறை 400 மீட்டர் தொடர் ஓட்டத்திலும் சிறப்பாகப் பங்கேற்று, நம்முடைய மாநிலத்திற்குப் பெருமை சேர்த்துள்ள டி. மாதவன், செல்வ பிரபு, எல். தனுஷ், லட்சுமி பிரபா, ஜனனி ரமேஷ் ஆகியோரைக் குறித்தும் பெருமை கொள்வதாக தெரிவித்தார் .
மாற்றுத்திறனாளிகளை நாட்டின் பெருமையுடைய குடிமக்களாக உணர்வதற்கும் தக்க நிலையை நாம் அனைவரும் உருவாக்கவேண்டும் என்றும் ஆட்டிஸம் குழந்தைகள் குறித்து உணர்வுடனும் ஆதரவுடனும் செயல்படுமாறு மக்களை கேட்டுக் கொண்டார். வட்டார – குறு வட்டார சமன்குறைகளைக் களைந்து, பாலின வேறுபாடுகளை நீக்கி, சமூக ஒற்றுமைக்கு வழி கோலும் ஆக்கப்பூர்வமான முன்னெடுப்புகளை மத்திய அரசு மேற்கொண்டு வருவதாக தெரிவித்தார்.
நம்முடைய தாய்மார்களும் சகோதரிகளும் மகள்களும், கல்வி, அறிவியல், ஆராய்ச்சி, தொழில், பாதுகாப்பு உள்ளிட்ட அனைத்துத் துறைகளிலும் வெற்றிக் கொடி நாட்டி, தங்களின் சக ஆண் குடிமக்களோடு தோளுக்குத் தோள் நிகராக நின்று புதிய இந்தியாவை பெண்கள் உருவாக்கி வருவதாக தெரிவித்தார்.
காலனியாதிக்கக் கல்வி முறை, வெற்றுப் பட்டதாரிகளையும் மனப்பாடக் கிளிகளையும் மட்டுமே உருவாக்கியதாகவும்,புதிய தேசியக் கல்விக் கொள்கை தன்னம்பிக்கை கொண்ட இளைஞர்களை உருவாக்கி வருவதாக தெரிவித்தார். மிக்க உற்சாகத்தோடும் ஆர்வத்தோடும் புதிய கல்விக் கொள்கை மக்களால் வரவேற்கப்பட்டிருப்பதாகவும் தெரிவித்தார்.
சுகாதாரம், கல்வி, உள்கட்டமைப்பு, தொழில்மயமாக்கம் போன்ற துறைகளில் நாம் மெச்சத்தக்க மேம்பாட்டை எட்டியுள்ளதாக தெரிவித்த அவர், இந்தியாவின் உயர்வுக்குத் தமிழ்நாட்டின் உயர்வு மிக முக்கியம் என்பது மட்டுமன்று; அடிப்படையும்கூட எனலாம் என்றும் தெரிவித்தார்.
மாநிலத்தின் சில பகுதிகளில் காணப்படுகிற தீண்டாமை என்பது கடந்தகாலத்தின் அருவருப்புத் தொடர்ச்சி; மனிதாபிமானமற்ற, அவமானத்திற்குரிய இந்த வழக்கம் உடனடியாக நிறுத்தப்படவேண்டும் என்றும் தெரிவித்தார்.
மேலும், ‘உங்களையெல்லாம், கனவுகளை நனவாக்கிக் கொள்ள எழும்பவும், நற்கனவு காணவும், உழைக்கவும் வேண்டுகிறேன். சுவாமி விவேகானந்தர் விடுத்த அறைகூவல் போல், ‘நோக்கம் நிறைவேறும்வரை நிற்காதீர்கள்’. இதுவரை காணாத வாய்ப்புகளை உங்களுக்குத் தரக்கூடிய ஆண்டுகளே, இனி வருகிற ஆண்டுகளாகும். வளர்ச்சிக்கும் மேம்பாட்டுக்குமான புதிய வாய்ப்புகளைப் பயன்படுத்திக் கொள்கிற அதே நேரத்தில், அரசமைப்புச் சட்டத்தில் பொதியப்பெற்றுள்ள, நாட்டிற்கான அடிப்படைக் கடமைகளை நீங்கள் மறந்துவிடலாகாது.
நெடுநாட்களாக, நம்முடைய உரிமைகளைப் பற்றி அறிந்துள்ளோம்; நம்முடைய கடமைகள் குறித்தும் விழிப்புணர்வு வேண்டும். உரிமைகளுக்கும் கடமைகளுக்கும் இடையில், பொருத்தமான சமன்பாடு இருந்தால் மட்டுமே, நாட்டிற்கு முழுமையான வளர்ச்சியும் மேம்பாடும் கிட்டும்’ எனவும் அவர் தெரிவித்தார்.