அரசு அலுவகங்களில் ‘ஹலோ’க்கு பதிலாக ‘வந்தே மாதரம்’ பயன்படுத்த வேண்டும்… மகாராஷ்டிரா அமைச்சர்

மஹாராஷ்டிராவில் அரசியல் சலனங்கள் காரணமாக சில சட்டமன்ற உறுப்பினர்கள் பதவி விலகி, புதிய உறுப்பினர்கள் சமீபத்தில் பதவி ஏற்றனர். அவர்களுக்கு மகாராஷ்டிர முதல்வர் ஏக்நாத் ஷிண்டே நேற்று இலாக்காக்களை அறிவித்தார்.
புதிய இலாக்காக்கள் அறிவிக்கப்பட்ட பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய, கலாச்சார அமைச்சர் சுதிர் முங்கந்திவார், மாநில அரசு அதிகாரிகள் அலுவலகங்களில் தொலைபேசி அழைப்புகளைப் பெறும்போது ‘ஹலோ’ என்பதற்குப் பதிலாக, ‘வந்தே மாதரம் ‘ என்று சொல்ல வேண்டும் என்று கூறினார்.
“நாம் சுதந்திர இந்தியாவின் 76 வது ஆண்டில் நுழைகிறோம். நாட்டின் சுதந்திர அமுதவிழாக் கொண்டாட்டத்தில் இருக்கிறோம்.எனவே, அதிகாரிகள் ஹலோ என்பதற்கு பதிலாக தொலைபேசியில் வந்தே மாதரம் என்று சொல்லிப் பழக வேண்டும்,” என்று கூறினார்.
இந்த புதிய வழக்கத்திற்கான முறையான அரசு உத்தரவு ஆகஸ்ட் 18 ஆம் தேதிக்குள் வெளியாகும் என்றார். அதோடு “அடுத்த ஆண்டு ஜனவரி 26 ஆம் தேதிக்குள் மாநிலத்தில் உள்ள அனைத்து அரசு அதிகாரிகளும் வந்தே மாதரம் என்று வணங்கும் பழக்கத்தை ஏற்படுத்திக்கொள்ளவேண்டும் என்று நான் விரும்புகிறேன்,” என்று அவர் கூறினார்.
அதோடு நேற்று தனது ட்விட்டர் பக்கத்தில்’ இலாகா விநியோகம் குறித்த அறிவிப்புகள் வெளியான உடனேயே, ஒரு கலாச்சார விவகார அமைச்சர் என்ற முறையில், ஒவ்வொரு குடிமகன் மற்றும் அரசு அலுவலக ஊழியர்களுக்கு எனது முதல் வேண்டுகோள் என்னவென்றால், “ஹலோ” என்பதற்குப் பதிலாக உரையாடலைத் தொடங்க “வந்தே மாதரம்” என்பதைப் பயன்படுத்த வேண்டும்.’ என்று பதிவிட்டுள்ளார்
வந்தே மாதரம் என்பது வெறும் வார்த்தை இல்லை. அது நம்நாட்டின் பெருமை. ஒவ்வொரு இந்தியனின் நாட்டுப்பற்றின் வெளிப்பாடாகும். மக்கள் அனைவரும் ஹலோ எனும் அந்நிய வார்த்தையை கைவிடுவது அவசியம் என்றார் முங்கண்டிவார்.