ஜெனிவாவுக்கு காட்டவும் – புலம்பெயர்ந்தோர் பணத்தை பெறவும் மட்டுமே தமிழர்கள் தேவை.
ஜெனிவாவுக்கு காட்டவும் – புலம்பெயர்ந்தோர் பணத்தை பெறவும் மட்டுமே தமிழர்கள் தேவை தமிழ் கட்சிகளை அரசோடு இணைத்துக் கொள்ள நினைப்பதன் பின்னணி காரணத்தை விக்னேஸ்வரன் வெளியிட்டார்!
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, தமிழ் அரசியல் கட்சிகளை அரசாங்கத்துடன் இணைத்துக்கொள்ள நினைப்பது ஜெனிவாவுக்கு காட்டுவதற்கே என வடமாகாண முன்னாள் முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் குற்றஞ்சாட்டியுள்ளார்.
ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 46/1 தீர்மானத்திற்கு இணங்க அரசாங்கம் இதுவரை தவறியுள்ளதாக விக்னேஸ்வரன் மேலும் தெரிவித்துள்ளார்.
கடந்த புதன் கிழமை ஜனாதிபதியுடன் இடம்பெற்ற கலந்துரையாடலின் போது புலம்பெயர் தமிழ் மக்களிடம் இருந்து நாட்டுக்கு பணத்தை கொண்டு வருவது தொடர்பான பிரேரணையை ஜனாதிபதி தன்னோடு பகிர்ந்து கொள்ள விரும்பியிருந்ததாக விக்னேஸ்வரன் கூறுகிறார்.
ஜனாதிபதியுடனான கலந்துரையாடலில் தோன்றிய மற்றுமொரு விடயத்தையும் விக்னேஸ்வரன் வலியுறுத்தியுள்ளார். அதாவது 13வது அரசியலமைப்புத் திருத்தத்தை அமுல்படுத்துவதில் ஜனாதிபதிக்கு அக்கறை இல்லை எனத் தெரிகிறது. அதிகாரப் பரவலாக்கலுக்குப் பதிலாக கடுமையான மையப்படுத்தப்பட்ட கட்டுப்பாட்டை ஸ்தாபிப்பதில் ஜனாதிபதியின் கவனம் செலுத்தப்பட்டிருப்பதைக் காண முடிந்ததாக முன்னாள் வடமாகாண முதலமைச்சர் தெரிவித்துள்ளார்.
இதற்கு மேலதிகமாக ஜனாதிபதியுடனான கலந்துரையாடலின் போது தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலை – வடக்கு காணிகள் மற்றும் காணாமல் போனோர் விவகாரம் தொடர்பிலும் கவனம் செலுத்தப்பட்டதாக விக்னேஸ்வரன் தெரிவித்தார்.
எவ்வாறாயினும் தமிழ் மக்களின் கோரிக்கைகளை நிறைவேற்றக்கூடிய தீர்வுகள் கிடைக்கும் வரை அரசாங்கத்துடன் நேரடியாக தொடர்பு கொள்ளாமல் எதிர்கட்சியில் இருந்துகொண்டே அரசாங்கத்திற்கு ஆதரவளிக்க தயாராக இருப்பதாக சி.வி. விக்னேஸ்வரன் ஜனாதிபதியிடம் தெரிவித்துள்ளார்.