புலம்பெயர் அமைப்புகளை சந்தித்து உரையாடத் தயார் அதற்கான சூழ்நிலையை அரசு உடனே உருவாக்கவேண்டும். மனோ.
“இலங்கையில் தற்போது ஆட்சியில் இருக்கும் ரணில் நிர்வாகம், உலகத் தமிழர் பேரவை, பிரிட்டன் தமிழர் பேரவை, கனடா தமிழ்க் காங்கிரஸ், ஆஸ்திரேலிய தமிழ்க் காங்கிரஸ், உலக திராவிட ஒருங்கிணைப்புக் குழு மற்றும் திராவிட ஈழ மக்கள் சம்மேளனம் ஆகிய ஆறு அமைப்புக்கள் மீதான தடையையும், 316 தனிநபர்களுக்குமான தடையையும் நீக்கியுள்ளது. இந்நடவடிக்கையை நான் வரவேற்கின்றேன். ஆனால், தடை நீக்கம் மாத்திரம் அவர்களைத் திருப்திப்படுத்தப் போவதில்லை.”
இவ்வாறு தமிழ் முற்போக்குக் கூட்டணியின் தலைவரும் கொழும்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான மனோ கணேசன் தெரிவித்தார்.
கொழும்பில் இன்று நடத்திய விசேட ஊடக சந்திப்பில் மனோ எம்.பி. மேலும் கூறியதாவது:-
“இலங்கையின் 52 பில்லியன் டொலர் கடன்சுமை, நாட்டை நடத்த மாதாந்த 500 மில்லியன் டொலர் தேவை ஆகிய வரலாறு காணாத பொருளாதார நெருக்கடியிலிருந்து மீள இலங்கையில் இருந்து புலம்பெயர்ந்துள்ள அனைத்து தமிழ், சிங்கள மக்களின் ஒத்துழைப்புகளை நாம் நாட வேண்டும். இதற்காகக் காலதாமதம் செய்யாமல், இந்நாட்டின் தேசிய ஐக்கியம் மற்றும் இனப்பிரச்சினை தீர்வு தொடர்பிலும், ஊழலற்ற நிதி நிர்வாகம் தொடர்பிலும் ஒரு குறைந்தபட்ச பொதுக் கோட்பாடுகளை இலங்கை அரசு புலம்பெயர் இலங்கையர்களை நோக்கி அரசின் உத்தரவாதமாக அறிவிக்க வேண்டும்.
இந்த அடிப்படையில் தமிழ் அமைப்புக்கள் மட்டுமல்ல, இலங்கையில் இருந்து புலம்பெயர்ந்துள்ள சிங்கள மற்றும் அனைத்து மக்களது அமைப்புக்களுடனும் சென்று உரையாட நான் தயாராக இருக்கின்றேன். ஒரு பக்கம் தமிழர் என்ற முறையிலும், மறுபுறம் தெற்கில் சிங்கள மக்கள் வாழும் கொழும்பு மாவட்ட எம்.பி. என்ற முறையிலும் நான் இந்த பாத்திரத்தை வகிப்பது பொருத்தமானது என நம்புகின்றேன். அரசில் அமைச்சுப் பதவிகளைப் பெறுவதை விட இதுதான் பிரயோஜனமானது எனவும் நான் நம்புகின்றேன்.
இன்று நாம் உலக நாடுகளிடம் கையேந்தி கொண்டு இருக்கின்றோம். ஆனால், இந்தியாவைத் தவிர எவரும் எமக்கு உதவில்லை. இந்திய மக்களின் வரிப்பணம் மூலமான இந்த உதவிகள் இன்னமும் எவ்வளவு நாளைக்குக் கிடைக்கும் எனத் தெரியவில்லை. சர்வதேச நாணய நிதி, உலக வங்கி ஆகியவை ஒதுங்கியே இருக்கின்றன.
அவர்களிடம் முன்வைக்கும் சமூக பொருளாதார திட்டம் என்ன? ஜனாதிபதி பதவி ஏற்று பல வாரங்கள் ஆகியும் இவை எதுவும் இன்னமும் நடைபெறவில்லை. இந்நிலையில், பழைய அடிப்படைகளில் இருந்து மாறி, புதிய முறையில் பார்க்க, சிந்திக்க முடியுமானால், நாம் உலகம் முழுக்க வாழும் நமது நாட்டு மக்களிடம், தாய் நாட்டுக்கு உதவுங்கள் எனக் கோர முடியும்.
உலகம் முழுக்கப் புலம்பெயர்ந்துள்ள அனைத்து தமிழ், சிங்கள இலங்கையர்கள் சுமார் 25 இலட்சம் பேர் வாழ்கின்றார்கள். இவர்கள் அனைவரும் மனமுவந்து நாட்டுக்கு உதவக்கூடிய அளவில் அவர்களது நம்பிக்கையை பெறுவது நாட்டின், நாட்டு அரசின் கடமை. இந்நாட்டில் வாழ முடியாமல், வெளிநாடுகளுக்கு போய் விட்ட இவர்களுக்கு நாடு நல்ல திசையில் மாறுகின்றது என்ற நம்பிக்கை ஏற்பட வேண்டும்.
ஆனால், அவற்றுக்கு முன்நிபந்தனைகள் உண்டு. புலம்பெயர்ந்துள்ள தமிழர்கள் குறிப்பாக நாட்டின் தேசிய இனப்பிரச்சினை தொடர்பில் உத்தரவாதங்களை எதிர்பார்ப்பார்கள். புலம்பெயர்ந்துள்ள சிங்கள மக்கள் குறிப்பாக தமது உதவிகள் ஊழல், வீண்விரயம் ஆகியவற்றை செய்யும் அரசியல்வாதிகளின் கைகளுக்கு போய்விடக்கூடாது தொடர்பில் உத்தரவாதங்களை எதிர்பார்ப்பார்கள்.
இந்நாடு சிங்கள பெளத்த நாடு என்ற அடிப்படை மாற வேண்டும். இந்நாடு சிங்கள, தமிழ், முஸ்லிம் நாடு என்ற அடிப்படை ஏற்கப்பட வேண்டும். இந்நாடு மதச் சார்பற்ற நாடாக மாறவும் வேண்டும். இலங்கையர் என்ற அடையாளம் மேலெழும்ப வேண்டும். அதேபோல் வெளிநாட்டில் இருந்து வரும், ஒவ்வொரு டொலரும், பவுண்டும், யூரோவும் நாட்டின் தேவைகளுக்காக வெளிப்படை தன்மையுடன் கூடிய பொறுப்பு கூறலுடன் பயன்படுத்தப்பட வேண்டும். இவை பற்றிய குறைந்தபட்ச பொதுக் கோட்பாடுகளை உத்தரவாதமாக இலங்கை அரசும், எதிர்க்கட்சிகளும் அறிவிக்கும்மானால், இது சாத்தியப்படலாம்” – என்றார்.