சொந்த ஊரிலிருந்து திரும்பும் பயணிகள் கவனத்திற்கு… அரசு போக்குவரத்து துறை முக்கிய அறிவிப்பு

சுதந்திர தின விடுமுறையையொட்டி அனைவரும் சொந்த ஊருக்கு சென்ற போது தனியார் ஆம்னி பேருந்துகளில் கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படுவதாக புகார் எழுந்த நிலையில், அதிகாரிகள் திடீர் சோதனையில் ஈடுபட்டனர்.

இதனைத் தொடர்ந்து, ஆம்னி பேருந்துகளில் அதிக கட்டணம் வசூலித்தால் நடவடிக்கை எடுக்கப்படும் என போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் எச்சரிக்கை விடுத்தார். இந்நிலையில், வட்டார போக்குவரத்து அதிகாரிகள் 15-க்கும் மேற்பட்டோர் கோயம்பேடு ஆம்னி பேருந்து நிலையத்தில் நேரடியாக ஆய்வு மேற்கொண்டனர். அப்போது, அதிக கட்டணம் வசூலித்த பேருந்துகளில், கூடுதல் கட்டணத்தை பயணிகளிடம் திருப்பிக் கொடுக்க அறிவுறுத்தினர்.

இந்நிலையில் தொடர் விடுமுறையை முன்னிட்டு சென்னையிலிருந்து ஏராளமான மக்கள் சொந்த ஊருக்கு சென்று இருந்த நிலையில் , மீண்டும் சென்னைக்கு திரும்பி உள்ளனர். அமைச்சர் ஆய்வு செய்தும் எதையும் கண்டு கொள்ளாத ஆம்னி பேருந்து உரிமையாளர்கள் மீண்டும் கட்டணத்தை உயர்த்தி உள்ளனர்.

இந்நிலையில் தமிழக போக்குவரத்துக்கழகம் செய்திக்குறிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில், “கடந்த மூன்று நாட்கள் தொடர் விடுமுறைக்காகத் தமிழகத்தின் பல்வேறு முக்கிய நகரங்களுக்குப் பயணம் செய்த பொது மக்கள் மீண்டும் சென்னை, கோயம்புத்தூர் , ஈரோடு, திருப்பூர் மற்றும் பெங்களூரு ஆகிய இடங்களுக்குத் திரும்ப வருவதற்கு வசதியாக அனைத்து முக்கிய நகரங்களிலிருந்தும் தினசரி இயக்கக்கூடிய பேருந்துகள் உடன் இன்றும், நாளையும் 850 சிறப்புப் பேருந்துகள் கூடுதலாக இயக்கப்படுகின்றன. அனைத்துப் பேருந்து நிலையங்களிலும் இந்த இயக்கத்தை கண்காணிக்க தமிழக அரசு போக்குவரத்து கழகங்களின் சார்பாகச் சிறப்பு அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.. பொது மக்கள் இந்த சிறப்பு பேருந்துகளை பயன்படுத்திக்கொள்ள கனிவுடன் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்..” எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

Leave A Reply

Your email address will not be published.