ஒரே நாளில் 8 முறை முகேஷ் அம்பானி குடும்பத்துக்கு கொலை மிரட்டல்.. ஒருவர் கைது
ரிலையன்ஸ் அறக்கட்டளை மருத்துவமனைக்கு இன்று காலை சுமார் 10.45 மணிக்கு மர்ம நபர் ஒருவர் தொலைபேசியில் அழைத்து பேசியுள்ளார். அப்போது, தான் ஒரு தீவிரவாதி எனக் கூறிய அந்த நபர், முகேஷ் அம்பானி மற்றும் அவரது குடும்பத்தினருக்கு மிரட்டல் விடுத்துள்ளார். இதேப்போன்று 12 மணி வரைக்கும் கால் செய்த அவர் சுமார் 8 முதல் 9 முறை மிரட்டல் விடுத்துள்ளார்.
இது தொடர்பாக ரிலையன்ஸ் அறக்கட்டளையின் மருத்துவமனை அதிகாரிகள் கூறுகையில் “நாங்கள் மருத்துவமனையில் கொடியேற்றும் விழாவை முடித்தபோது, காலை 10:45 மணி முதல் 12 மணி வரை எங்கள் தலைவரை அச்சுறுத்தும் வகையில் எட்டு முதல் ஒன்பது அழைப்புகள் வந்தன. அதன்பிறகு, மும்பை காவல்துறை அதிகாரிகளிடம் புகார் அளிக்கப்பட்டது. இதை தொடர்ந்து காவல் துறை அதிகாரிகள் அழைப்பு விடுத்தவர் குறித்த கூடுதல் தகவலை பெற்று விசாரணை நடத்தினர் என்றுள்ளனர்.
மும்பை போலீசார் நடத்திய விசாரணையில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். அவர் மனநலம் பாதித்தவர் என்றும் காவல்துறை அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அம்பானி குடும்பத்தினருக்கு கொலை மிரட்டல் விடுக்கப்பட்டததை அடுத்து அவரது வீட்டிற்கும், குடும்பத்தினருக்கும் பாதுகாப்புகள் பலப்படுத்தப்பட்டுள்ளன.
கடந்த ஆண்டு முகேஷ் அம்பானியின் மும்பை வீட்டு அருகே வெடிபொருட்களுடன் கார் ஒன்று நிறுத்தப்பட்டிருந்தது. இந்த கார், தொழிலதிபர் மான்சுக் ஹிரனுக்கு சொந்தமானது என்பது தெரிய வந்தது.. இந்த கார் பிடிபட்ட சில நாட்களில் மான்சுக் ஹிரன், மர்மமான முறையில் உயிரிழந்து கிடந்தார். ஆனால் மான்சுக் ஹிரனின் காரை போலீஸ் அதிகாரி சச்சின் வாஸ் பயன்படுத்தி வந்தது தெரியவந்தது. இதனையடுத்து சச்சின் வாஸ், தேசிய புலனாய்வு ஏஜென்சியால் கைது செய்யப்பட்டு விசாரிக்கப்பட்டார் என்பது குறிப்பிடதக்கது.