சுபர் கிங்ஸ் அணியில் இணையும் தீக்க்ஷன! ; தலைவராகும் டு பிளெசிஸ்!
தென்னாபிரிக்காவில் அடுத்த ஆண்டு ஆரம்பமாகவுள்ள கிரிக்கெட் லீக் (CSA T20) தொடரின், ஜொஹன்னஸ்பேர்க் சுபர் கிங்ஸ் அணியில் இலங்கை வீரர் மஹீஷ் தீக்ஷன ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.
இந்தியாவின் IPL தொடரின் சென்னை சுபர் கிங்ஸ் அணி உரிமையாளர்கள், ஜொஹன்னஸ்பேர்க் சுபர் கிங்ஸ் அணியை வாங்கியுள்ளனர். இந்தநிலையில் வீரர்கள் ஏலத்துக்கு முன்னர் நேரடி ஒப்பந்தங்களை ஒவ்வொரு அணிகளும் அறிவித்து வருகின்றன.
அதன்படி தங்களுடைய 5 நேரடி ஒப்பந்த வீரர்களை ஜொஹன்னஸ்பேர்க் சுபர் கிங்ஸ் அணி இன்று (15) அறிவித்துள்ளது. சென்னை சுபர் கிங்ஸ் அணியின் முன்னாள் வீரர் பெப் டு பிளெசிஸ் ஜொஹன்னஸ்பேர்க் சுபர் கிங்ஸ் அணிக்காக நேரடியாக ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். எனவே, சுபர் கிங்ஸ் அணியின் தலைவராக பெப் டு பிளெசிஸ் செயற்படுவார் என்ற தகவலும் வெளியாகியுள்ளது.
பெப் டு பிளெசிஸ் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளதுடன், இலங்கை வீரர் மஹீஷ் தீக்ஷன, இங்கிலாந்தின் மொயீன் அலி, மே.தீவுகளின் ரொமாரியோ ஷெப்பர்ட் மற்றும் தென்னாபிரிக்காவின் புதுமுக வேகப்பந்துவீச்சாளர் ஜெரால்ட் கோட்ஸி ஆகியோர் நேரடியாக ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளனர்.
ஒப்பந்தம் செய்யப்பட்ட 5 வீரர்களில் பெப் டு பிளெசிஸ், மொயீன் அலி மற்றும் மஹீஷ் தீக்ஷன ஆகியோர் ஏற்கனவே சென்னை சுபர் கிங்ஸ் அணியில் விளையாடியுள்ளனர். பெப் டு பிளெசிஸிற்கு 3 இலட்சத்து 75 ஆயிரம் அமெரிக்க டொலர்கள் ஒப்பந்தத்தொகையாக வழங்கப்படவுள்ளது.
அதேநேரம் மொயீன் அலிக்கு 4 இலட்சம் அமெரிக்க டொலர்கள், மஹீஷ் தீக்ஷனவுக்கு 2 இலட்சம் அமெரிக்க டொலர்கள், ரொமாரியோ ஷெப்பர்டுக்கு ஒரு இலட்சத்து 75 ஆயிரம் அமெரிக்க டொலர்கள் மற்றும் ஜெரால்ட் கோட்ஸிக்கு 50 ஆயிரம் அமெரிக்க டொலர்கள் என வழங்கப்படவுள்ளன. இதில் மஹீஷ் தீக்ஷனவுக்கு வழங்கப்படவுள்ள 2 இலட்சம் அமெரிக்க டொலர்களானது, இலங்கை ரூபாவில் கிட்டத்தட்ட 7 கோடி 26 இலட்சத்தை நெருங்கும் என்பது குறிப்பிடத்தக்கது.
ஜொஹன்னஸ்பேர்க் சுபர் கிங்ஸ் அணியின் தலைமை பயிற்றுவிப்பாளராக சென்னை சுபர் கிங்ஸ் அணியின் தலைமை பயிற்றுவிப்பாளர் ஸ்டீபன் பிளெமிங் செயற்படவுள்ளார் என்பதுடன், உதவி பயிற்றுவிப்பாளராக எரிக் சிம்மன்ஸ் செயற்படவுள்ளார். அதுமாத்திரமின்றி சென்னை சுபர் கிங்ஸ் அணியின் முன்னாள் வீரரான தென்னாபிரிக்காவின் அல்பீ மோர்கல், பயிற்றுவிப்பு குழாத்தில் இணைக்கப்படலாம் என்ற தகவலும் வெளியாகியுள்ளது.
தென்னாபிரிக்காவில் நடைபெறவுள்ள இந்த கிரிக்கெட் லீக் தொடரில் 6 அணிகள் பங்கேற்கவுள்ளதுடன், குறித்த இந்த தொடர் அடுத்த ஆண்டு ஆரம்பத்தில் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகின்றது.