புலம்பெயரிகளுக்குத் தடை நீக்கம்: தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தல்! – பதறுகின்றார் பொன்சேகா.
“தேசியப் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் இருந்தமையால்தான் தடைப்பட்டியலில் புலம்பெயர் தமிழ் அமைப்புக்களும், அடையாளம் காணப்பட்ட தனிநபர்களும் சேர்க்கப்பட்டனர். தேசியப் பாதுகாப்புத் தொடர்பில் கவனம் செலுத்தாமல், சர்வதேசத்தை ஏமாற்றுவதற்காகவும், ஜெனிவா மாநாட்டைச் சமாளிக்கவுமே ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தடை நீக்கம் என்ற இந்த நாடகத்தை அரங்கேற்றியுள்ளார். அவரின் இந்த ஏமாற்று நாடகத்துக்கு சர்வதேசமும் பலியாகப்போகின்றது.”
– இவ்வாறு முன்னாள் இராணுவத் தளபதியும் ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினருமான பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா தெரிவித்தார்.
புலம்பெயர் அமைப்புக்கள் மீதான தடை நீக்கம் தொடர்பில் ஊடகங்களிடம் கருத்து வெளியிடும்போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.
அவர் மேலும் தெரிவித்ததாவது:-
“ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவினரை ஏமாற்றி பிரதமர் பதவியை சுவீகரித்து பின்னர் ஜனாதிபதியாகிய ரணில், முழு நாடாளுமன்றத்தையும் ஏமாற்றி, நாட்டு மக்களையும் முட்டாளாக்கி இன்று சர்வதேசத்தையும் முட்டாளாக்கும் கைங்கரியத்தில் ஈடுபட்டுள்ளார்.
தேசியப் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் இருந்தமையால்தான் தடைப்பட்டியலில் புலம்பெயர் தமிழ் அமைப்புக்களும், அடையாளம் காணப்பட்ட தனிநபர்களும் சேர்க்கப்பட்டனர். இந்தநிலையில் யார் மூலம் காய்களை நகர்த்தி சர்வதேசத்தை ஏமாற்ற முடியுமோ அந்த அமைப்புக்களையும் குறிப்பிட்ட நபர்கள் மீதான தடையையும் ஜனாதிபதி நீக்கியுள்ளார்.
பாதுகாப்பு அமைச்சர் என்ற ரீதியிலும் நாட்டின் அரச தலைவர் என்ற ரீதியிலும் இது தொடர்பில் நாடாளுமன்றத்துக்கும், நாட்டு மக்களுக்கும் விரிவான விளக்கத்தை அவர் வழங்க வேண்டும்” – என்றார்.