திருப்பதியில் பக்தர்கள் 40 மணி நேரம் காத்திருப்பு… 50 பேருடன் விஐபி தரிசனம் செய்த அமைச்சரால் சர்ச்சை
திருப்பதியில் ஆந்திர அமைச்சர் ஒருவர் தன்னுடைய 50 ஆதரவாளர்களுடன் விஐபி தரிசனத்தில் சுவாமி தரிசனம் செய்தது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
தொடர் விடுமுறையால் திருப்பதி ஏழுமலையான் கோயிலில் கடந்த 2 நாட்களாக ஏழுமலையானை தரிசிக்க பக்தர்கள் 40 மணிநேரம் காத்திருக்க வேண்டிய நிலை உள்ளது. தரிசன வாய்ப்பு கிடைக்காத ஆயிரக்கணக்கான பக்தர்கள் கோயில் முன்பு தேங்காய் உடைத்து மானசீகமாக ஏழுமலையானை வழிபட்டு ஊர் திரும்பி செல்கின்றனர்.
கூட்டம் அதிகமாக இருப்பதால் வரும் 21ம் தேதி வரை விஐபி தரிசனம் ரத்து செய்வதாக தேவஸ்தானம் அறிவித்தது. இருப்பினும், மாநில பெண்கள் மற்றும் குழந்தைகள் நலத்துறை அமைச்சர் உஷாஸ்ரீ சரண் நேற்று அதிகாலை சுப்ரபாத சேவையில் ஏராளமான ஆதரவாளர்களுடன் திருப்பதி ஏழுமலையானை தரிசிக்க சென்றார்.
விஐபி தரிசனத்தில் மிக முக்கிய பிரமுகர்களுக்கு மட்டுமே வழங்கப்படும் புரோட்டோகால் தரிசனத்தில் 50 டிக்கெட்டுகள் கேட்டு அழுத்தம் கொடுத்துள்ளார். இதற்கு, நிர்வாக அதிகாரி தர்மா ரெட்டி மறுத்ததால், 15 பேருக்கு மட்டுமே புரோட்டோகால் தரிசனம் வழங்கப்பட்டது. மீதமுள்ள 35 பேருக்கு பிரேக் தரிசனம் வழங்கப்பட்டது.
இதுகுறித்து அமைச்சரிடம் நிருபர்கள் கேட்க முயன்றபோது, அவரது பாதுகாவலர்கள் அமைச்சரை நிருபர்கள் நெருங்க இயலாத வகையில் தடுத்து நிறுத்தினர்.
ஏற்கனவே, கடந்த வாரம் கால்நடைத்துறை அமைச்சர் அப்பலராஜூ வந்தபோது, தனது ஆதரவாளர்கள் 150 பேருடன் விஐபி தரிசனத்தில் அழைத்து சென்றார். இதனால், பக்தர்கள் தேவஸ்தான அதிகாரிகளின் நடவடிக்கைக்கு கடும் கண்டனம் தெரிவிக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.