இந்து சமுத்திரத்தின் அமைதி இலங்கையின் கைகளிலேயே ‘யுவான் வாங் 5’ கப்பல் வரவேற்பு நிகழ்வில் விமல் தெரிவிப்பு.
“இலங்கை சீர்குலைந்தால் இந்து சமுத்திரத்தில் அமைதியின்மை ஏற்படும். ஸ்திரமின்மை நிலைகொள்ளும். இந்த நிலைமை ஏற்படாமல் எம்மால் முன்னேறிச் செல்ல முடியும் என நாம் நம்புகின்றோம்.”
இவ்வாறு தேசிய சுதந்திர முன்னணியின் தலைவரும் முன்னாள் அமைச்சருமான விமல் வீரவன்ச எம்.பி. தெரிவித்தார்.
அம்பாந்தோட்டைத் துறைமுகத்துக்கு இன்று காலை வருகை தந்துள்ள சீன இராணுவத்தின் ‘யுவான் வாங் 5’ கப்பலுக்கு உத்தியோகபூர்வ வரவேற்பளிக்கும் நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.
தொடர்ந்து கருத்து வெளியிட்ட அவர்,
“எமது கடல், வான்வெளியே எம்மை ஏனைய நாடுகளுடன் இணைக்கின்றது. அவற்றில் இறையாண்மை அடிப்படையில் எமக்குச் சில உரிமைகள் உள்ளன. ஒரு நாடு என்ற வகையில் அதனைப் பேண வேண்டிய கடப்பாடு எமக்கு உள்ளது.
இந்து சமுத்திரத்தில் அமைதி நிலவ வேண்டும். இந்து சமுத்திரம் போர்க் களமாகவோ, எதிரிகளின் கூடாரமாகவோ மாறிவிடக்கூடாது என்பதே எமது எதிர்பார்ப்பு.
நாம் பொருளாதார ரீதியில் பலமாகவோ, பலவீனமாகவோ இருந்தாலும் இந்து சமுத்திரத்தை நாம் பாதுகாத்தே தீர வேண்டும்.
சிலர் இதனை உளவுக் கப்பல் என்றனர். நாம் இதனைத் தொழில்நுட்பக் கப்பல் என்கின்றோம். கப்பலுக்கு இலங்கை வர அனுமதி வழங்கப்பட வேண்டும் என்ற நிலைப்பாட்டில் எம்மில் சிலர் இருந்தோம்” – என்றார்.