இலங்கையில் ஆட்சிக் கவிழ்ப்புக்குச் சீனா துணைபோகவே இல்லை! – போற்றிப் புகழ்ந்தார் விமல்.
இலங்கையில் தொண்டு நிறுவனங்களை நிறுவி ஆட்சிக் கவிழ்ப்புக்களை மேற்கொள்ள சீனா ஒருபோதும் துணைபோகவில்லை என்று தேசிய சுதந்திர முன்னணியின் தலைவரும் முன்னாள் அமைச்சருமான விமல் வீரவன்ச எம்.பி. தெரிவித்தார்.
அம்பாந்தோட்டைத் துறைமுகத்துக்கு இன்று காலை வருகை தந்துள்ள சீன இராணுவத்தின் ‘யுவான் வாங் 5’ கப்பலுக்கு உத்தியோகபூர்வ வரவேற்பளிக்கும் நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,”சீனா எம்முடன் நீண்டகாலமாக நட்புறவைக் கொண்டுள்ளது. நாதம் பொருளாதார ரீதியில் விழுந்துள்ள சந்தர்ப்பங்களிலும் எமக்குக் கைகொடுக்கும் நாடுகளில் சீனாவும் ஒன்றாகும்.
நாம் எதனைச் செய்ய வேண்டும் என்று எமக்கு ஒருபோதும் சீனா அழுத்தங்களைப் பிரயோகிக்கவில்லை. இலங்கையில் தொண்டு நிறுவனங்களை நிறுவி ஆட்சிக் கவிழ்ப்புக்களை மேற்கொள்ள சீனா ஒருபோதும் செயற்பட்டதில்லை.
இலங்கை தற்போது பொருளாதார ரீதியில் நெருக்கடிகளை கொண்டுள்ளது. இந்த நிலைமையில் கடன்களை விட முதலீடுகளையே இலங்கை எதிர்பார்க்கின்றது.
இந்தச் சந்தர்ப்பத்தில் கடன்களைவிட முதலீடுகளால் சீனா எமக்கு அதிகம் உதவும் என்று நாம் எதிர்பார்க்கின்றோம்” – என்றார்.