வகுப்புத்தடை விதிக்கப்பட்ட பல்கலை மாணவன் உயிரை மாய்க்க முயற்சி! வைத்தியசாலையில் சேர்ப்பு.

பகிடிவதையில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் தற்காலிக வகுப்புத்தடை விதிக்கப்பட்டுள்ள யாழ்ப்பாணம் பல்கலைக்கழக மாணவர்களில் ஒருவர் தவறான முடிவெடுத்து உயிரை மாய்க்க முயன்ற நிலையில் தெல்லிப்பளை ஆதார வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளார்.
கடந்த மாதம் யாழ். பல்கலைக்கழக புதுமுக மாணவர்களைத் தெல்லிப்பளைப் பகுதிக்கு அழைத்து பகிடிவதை புரிந்தனர் எனக் குற்றஞ்சாட்டப்பட்ட 18 மாணவர்களுக்குத் தற்காலிக வகுப்புத்தடை விதிக்கப்பட்டுள்ளது.
பகிடிவதை சம்பவம் தொடர்பில் விசாரணைகளை பல்கலைக்கழக நிர்வாகம் முன்னெடுத்து வரும் நிலையில் விசாரணைக்கு ஏதுவாக 18 மாணவர்களுக்கும் தற்காலிக வகுப்புத்தடை விதிக்கப்பட்டது.
இந்நிலையில், விரிவுரையாளர் ஒருவர் தனது விரிவுரையில், வகுப்புத்தடை விதிக்கப்பட்ட மாணவர்களின் புகைப்படங்களைக் காண்பித்து “இவர்கள்தான் பல்கலைக்கழக மாபியாக்கள்” எனக் கூறி 18 மாணவர்கள் தொடர்பிலும் தவறான தகவல்களை மாணவர்கள் மத்தியில் கூறியுள்ளார்.
இது தொடர்பில் பாதிக்கப்பட்ட மாணவர்களால், பல்கலைக்கழக நிர்வாகத்துக்கு அறிவிக்கப்பட்டது. நிர்வாகம் அது தொடர்பில் கரிசனை கொள்ளவில்லை என்று மாணவர்கள் தெரிவித்தனர்.
தமது புகைப்படங்களைக் காண்பித்து மாணவர்கள் மத்தியில் தவறான தகவல்களைப் பரப்பியமை தொடர்பில் மனித உரிமைகள் ஆணைக்குழுவின் யாழ். பிராந்திய அலுவலகத்திலும் முறைப்பாடு செய்யப்பட்டது. குறித்த முறைப்பாடு குறித்து யாழ்.பல்கலைக்கழகத் துணைவேந்தருக்கும் தெரியப்படுத்தப்பட்டது.
இந்நிலையில், வகுப்புத்தடை விதிக்கப்பட்ட மாணவர்களில் ஒருவர் தவறான முடிவெடுத்து உயிரை மாய்க்க முயன்ற நிலையில் தெல்லிப்பளை வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றார் என்று மாணவர்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.