அகவிலைப்படி யாருக்கெல்லாம் உயர்த்தி வழங்கப்படும்? தமிழக அரசு விளக்கம்
தமிழ்நாடு அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி உயர்வு (Dearness Allowance) குறித்த அரசாணை விரைவில் வெளியிடப்படும் என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது.
கடந்த ஆகஸ்ட் 15ம் தேதி 75வது சுதந்திர தின உரையில் பேசிய முதலமைச்சர், ” மத்திய அரசுப் பணியாளர்களுக்கு இணையாக, மாநில அரசுப் பணியாளர்களுக்கும் அகவிலைப் படியை உயர்த்தி வழங்கிடும் கோரிக்கையை ஏற்று, கடுமையான நிதிச்சுமைக்கு இடையிலும், அரசு அலுவலர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்கள் மற்றும் குடும்ப ஓய்வூதியதாரர்களுக்கு, அகவிலைப்படி 31 விழுக்காட்டில் இருந்து 34 விழுக்காடாக உயர்த்தி வழங்கப்படும்” என்று தெரிவித்தார்.
மேலும், இந்த உயர்வு 01.07.2022 முதல் வழங்கப்படும் என்றும் ஓய்வூதியதாரர்கள் மற்றும் குடும்ப ஓய்வூதியதாரர்களுக்கும் இது பொருந்தும் என்று தெரிவித்தார்.
இதற்கிடையே, இந்த அகவிலைப்படி உயர்வு அங்கன்வாடி பணியாளர்கள், சத்துணவு சமையலர்கள், கிராம உதவியாளர்கள் உள்ளிட்ட பணியாளர்களுக்கு பொருந்துமா என்ற கேள்வி எழுந்து வந்ததது .இந்நிலையில், இதனை தெளிவுபடுத்தும் தமிழக அரசு செய்திக் குறிப்பை ஒன்றை வெளியிட்டுள்ளது.
அதில், கடுமையான நிதிச்சுமைக்கு இடையிலும் மாநில அரசு ஊழியர்கள்/ஓய்வூதியதாரர்கள் மற்றும் குடும்ப ஓய்வூதியதாரர்களுக்கு 01.07.2022 முதல் அகவிலைப்படியை 31 விழுக்காட்டிலிருந்து 34 விழுக்காடாக உயர்த்தி வழங்கப்படும் என தமிழ்நாடு முதலமைச்சர் சுதந்திர தின உரையில் அறிவித்திருந்தார். இந்த அறிவிப்பின்படி, தலைமைச் செயலளாளர் முதல் கடைநிலை ஊழியர் வரை அனைத்து தமிழ்நாடு அரசின் ஊழியர்களுக்கும் இந்த அகவிலைப்படி 01.07.2022 முதலே உயர்த்தி வழங்கப்படும். இதற்கான அரசாணைகள் விரைவில் தனித்தனியே வெளியிடப்படும்” என்று தெரிவிக்கப்பட்டது.