யாழ்ப்பாணப் பல்கலைக்கழக இராமநாதன் நுண்கலைக் கழகம் பீடமாகத் தரமுயர்வு!
யாழ்ப்பாணப் பல்கலைக்கழக கலைப்பீடத்தின் கீழ் இயங்கி வந்த இராமநாதன் நுண்கலைக் கழகம் “சேர். பொன்னம்பலம் இராமநாதன் அரங்காற்று மற்றும் கட்புலக் கலைகள் பீடமாக (Sri Ponnambalam Ramanathan Faculty of Performing and Visual Arts)த் தரமுயர்த்தப்பட்டுள்ளது.
இந்த அறிவித்தல் கல்வி அமைச்சர் கலாநிதி சுசில் பிறேம ஜெயந்தவினால் கடந்த 16ஆம் திகதி கையொப்பமிடப்பட்டு, அதிசிறப்பு வர்த்தமான அறிவித்தலாக வெளியிடப்பட்டுள்ளது.
இராமநாதன் நுண்கலைக் கழகமானது, 1960 ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் 6ஆம் திகதி முன்னாள் தபால் மற்றும் தொலைத்தொடர்பு அமைச்சர் சு. நடேசபிள்ளையினால், அவரது மாமனாராகிய சேர் பொன்னம்பலம் இராமநாதன் அவர்களின் ஞாபகார்த்தமாக ஆரம்பிக்கப்பட்டது. இராமநாதன் நுண்கலைக் கழகம், இராமநாதன் கல்லூரியுடன் இணைந்ததாக சுன்னாகத்துக்கு சமீபமாக மருதனார்மடத்தில் அமைக்கப்பட்டது.
தமிழ் தொல்சீர் இசை, பரதநாட்டியம் என்பவற்றை மேம்பாடடையச் செய்தல், தமிழ் பண்பாட்டுப் பேற்றின் தனித்துவம், அடையாளம் என்பவற்றை மேம்படுத்தல் – பரவச் செய்தல் என்பவற்றினூடாகக் கற்றலுக்கான ஓர் அரணாக அமைந்திருக்க வேண்டுமென்பதே இராமநாதன் நுண்கலைக் கழகம் அமைக்கப்பட்டதன் நோக்கமாக இருந்தது.
1974ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் ஆறாம் திகதி இலங்கைப் பல்கலைக்கழகத்தின் ஆறாவது வளாகமாக யாழ்ப்பாண வளாகம் உருவாக்கப்பட்ட தொடக்க நிகழ்வின் போது இராமநாதன் நுண்கலைக் கழகமும் பல்கலைக்கழக முறைமைக்குள் உள்ளீர்ப்பு செய்யப்படுதல் வேண்டும் என்பதை இலங்கைக் குடியரசின் பிரதமர் திருமதி சிறிமாவோ ரத்வத்தே டயஸ் பண்டாரநாயக்காவும், அப்போதைய கல்வி அமைச்சரும், இலங்கைப் பல்கலைக்கழகத்தின் வேந்தருமாகிய கலாநிதி அல்ஹாஜ் பதியுதின் மொகமட்டும் கொள்கை அளவில் ஏற்றுக் கொண்டனர்.
வட பிராந்தியத்தின் கலை, பண்பாடுகளைப் பாதுகாப்பதற்கும், முன்னேற்றுவதற்கும், தமிழ்மொழியை மேம்பாடடையச் செய்வதற்கும்,இந்தத் துறைகளில் ஆழமான ஆய்வை உறுதிப்படுத்துதற்குமாகவே இது பற்றி ஆலோசிக்கப்பட்டது.
1975 ஆம் ஆண்டு இலங்கை பல்கலைக் கழகத்தின் யாழ்ப்பாண வளாகத்துடன் இராமநாதன் நுண்கலைக் கழகம் இணைக்கபட்டது. எனினும் அன்று முதல் இன்று வரை அது ‘கழகமாகவே’ இயங்கி வந்தது.
இராமநாதன் நுண்கலைக்
கழகத்தின் செயற்பாடுகளை மேலோங்கச் செய்வதற்காகவும், சேவைகளை விரிவுபடுத்துவதற்காகவும் அதனை ஒரு உயர்நிலை நிறுவனமாக அல்லது பீடமாக தரமுயர்த்த வேண்டிய தேவையை உணர்ந்ததன் பின்னணியில் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம் 2009 ஆம் ஆண்டு தொடக்கம் பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவுடன் சேர்ந்து அதற்கான முயற்சிகளில் ஈடுபட்டுவந்தது.
1978 ஆம் ஆண்டின் 16 ஆம் இலக்க பல்கலைக்கழகங்கள் சட்டத்தின் 27 (1) ஆம் பிரிவின் கீழ் பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் விதந்துரைக்கமைவாக கல்வி அமைச்சர் கலாநிதி சுசில் பிறேம ஜயந்த் 2022 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 16 ஆம் திகதி ஒப்பமிட்டதன் படி வெளியிடப்பட்ட 2293/22 ஆம் இலக்க அதி விஷேட வர்த்தமானி மூலம் “சேர். பொன்னம்பலம் இராமநாதன் அரங்காற்று மற்றும் கட்புலக் கலைகள் பீடம் (Sri Ponnambalam Ramanathan Faculty of Performing and Visual Arts) பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.
இந்த அறிவித்தலின் படி, இசைத்துறை, வாத்தியத் துறை, நடனத்துறை, ஓவியத்துறை, சிற்பக்கலைத்துறை, நாடக அரங்கியல் துறை ஆகிய ஆறு துறைகள் உள்வாங்கப்பட்டுள்ளன.
யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம் இசை (வாய்ப்பாட்டு, வயலின், வீணை, பண்ணிசை, மிருதங்கம்), நடனம் (பரதநாட்டியம்), சித்திரமும் வடிவமைப்பும், நாடகமும் அரங்கியலும் (நான்கு வருடங்கள்) எனும் நுண்கலைகளுக்கான இளங் கலைமாணிச் சிறப்புப் பட்டங்களை, இந்தப் பட்டப்படிப்பு பாடநெறிகளின் முன்னோடியான இராமநாதன் நுண்கலைக் கழகத்தினூடாக, வழங்கி வந்தது.
ஒவ்வொரு பாடநெறியாலும் வழங்கப்படுகின்ற இளம் நுண்கலைமாணிப் பட்டங்கள் தொழில் தகைமையுடையனவாகும். இப் பட்டதாரிகள் சமூகத்தின் சவால்களுக்கும், தொழில் சந்தையின் எதிர்பார்ப்புக்களுக்கும் தங்களைத் தயார்படுத்தியவர்களாக இருப்பர். இதனால் இவர்கள் மிகச் சிறந்த முறையில் போதுமான வளங்களுடனும், போட்டித் தன்மையுடனும், தொழிற்றகைமை பெறத்தக்க வகையிலும் பயிற்றுவிக்கப்படுதல் வேண்டும் என்ற நோக்கோடு தற்போது சேர். பொன்னம்பலம் இராமநாதன் அரங்காற்று மற்றும் கட்புலக் கலைகள் பீடம் உருவாக்கப்பட்டுள்ளது.