இந்தியாவுக்கு எதிரான கருத்து: 8 யூடியூப் சேனல்கள் முடக்கம்
இந்தியாவுக்கு எதிரான கருத்துகளை வெளியிட்ட 8 யூடியூப் சேனல்களை மத்திய அரசு முடக்கியுள்ளது.
இந்திய எதிர்ப்பு கருத்துகளை பரப்பிய பாகிஸ்தானைச் சேர்ந்த ஒரு சேனல் உள்பட 8 யூடியூப் சேனல்களை தகவல் தொழில்நுட்ப சட்டத்தின் கீழ் மத்திய அரசு முடக்கியுள்ளது.
முன்னதாக, கடந்த ஜூலை 22 ஆம் தேதி இந்தியாவில் தவறான செய்திகளை வெளியிட்ட 94 யூடியூப் சேனல்கள், 19 சமூக வலைதள கணக்குகள், 747 வலைதள முகவரிகள் ஆகியவற்றை தகவல் தொழில்நுட்ப சட்டம், 69ஏ பிரிவின் கீழ் முடக்கியதாக மத்திய தகவல் மற்றும் ஒலிபரப்புத் துறை அமைச்சர் அனுராக் தாக்கூர் தெரிவித்திருந்தார்.
மேலும், தேசப் பாதுகாப்பு, வெளியுறவுக் கொள்கைகள் குறித்து தவறான தகவலை வெளியிட்டதால், பாகிஸ்தானிலிருந்து செயல்படும் 6 சேனல்கள் உள்பட 16 யூடியூப் சேனல்களுக்கும், ஒரு ஃபேஸ்புக் கணக்குக்கும் மத்திய தகவல், ஒலிபரப்பு அமைச்சகம் தடை விதித்தது குறிப்பிடத்தக்கது.