அடக்குமுறையை உடன் நிறுத்து! – ரணில் அரசிடம் ஹிருணிகா இடித்துரைப்பு.
“ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் பிரத்தியேக இல்ல வளாகத்தில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டமைக்காக ஐக்கிய மகளிர் கூட்டணியின் அங்கத்தவர்கள் அரசால் இலக்கு வைக்கப்படுகின்றனர். விரைவில் என்னையும் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்துக்கு அழைக்கக் கூடும். எனினும், அவற்றுக்கு நாம் அஞ்சப் போவதில்லை.”
முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஹிருணிகா பிரேமச்சந்திர தெரிவித்தார்.
கொழும்பிலுள்ள எதிர்க்கட்சி தலைவர் அலுவலகத்தில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் இதனைத் தெரிவித்த அவர் மேலும் கூறுகையில்,
“கடந்த மே, ஜூன் மற்றும் ஜூலை மாதங்களில் 9 ஆம் திகதி முன்னெடுக்கப்பட்ட ஆர்ப்பாட்டங்களின் காரணமாகவே ரணில் விக்கிரமசிங்க ஜனாதிபதியாகப் பதவியேற்றார் என்பதை அவர் மறந்து விடக்கூடாது.
எனவே, ஆர்ப்பாட்டக்காரர்களுக்கு எதிரான அடக்குமுறைகளை அவர் தலைமையிலான அரசு உடன் கைவிட வேண்டும். காலிமுகத்திடல் ஆர்ப்பாட்டத்துடன் எந்தத் தொடர்பும் இல்லாத பெண்கள் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்துக்கு அழைக்கப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்படுகின்றனர்.
ஐக்கிய மகளிர் கூட்டணியின் செயலாளர் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்துக்கு அழைக்கப்பட்டு, அவரிடம் சுமார் 5 மணித்தியாலங்கள் வாக்குமூலம் பெறப்பட்டுள்ளது.
போராட்டத்தில் ஈடுபட்டவர்களைப் பாசிஸவாதிகளாகக் காண்பிப்பதற்கே அரசு இவ்வாறான செயற்பாடுகளை முன்னெடுத்துக் கொண்டிருக்கின்றது.
1988, 1989 களில் இடம்பெற்ற வன்முறைகளைப் போன்று இந்த ஆர்ப்பாட்டங்களையும் காண்பிப்பதற்கு அரசு முயற்சிக்கின்றது” – என்றார்.