கிளிநொச்சி வளாகத்திற்கு வருகை தந்த கல்வி அமைச்சர் சுசில் மாணவர்களால் துரத்தியடிக்கப்பட்டார்.

யாழ்.பல்கலைக்கழகத்துடன் இணைந்த கிளிநொச்சி வளாகத்தில் இன்னும் கட்டி முடிக்கப்படாத கட்டிடத்தை திறப்பதற்கு சென்ற கல்வி மற்றும் உயர்கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்தவிற்கு எதிராக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட பல்கலைகழக மாணவர்கள் அமைச்சரை திட்டி துரத்தியடித்துள்ளனர்.
மாணவர்கள்,அமைச்சரை பல்கலைக்கழகத்திற்குள் அனுமதிக்கவில்லை என தெரியவருகிறது.
கிளிநொச்சி பல்கலைக்கழகத்தில் இதுவரை கட்டி முடிக்கப்படாத தொழில்நுட்ப பீட கட்டிடத்தை திறந்து வைக்க அமைச்சர் வருகை தந்ததுடன், அரசியல் காரணங்களுக்காக கட்டி முடிக்கப்படாத கட்டிடத்தை திறக்க அனுமதிக்க முடியாது என போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள் தெரிவித்தனர்.
அமைச்சரின் வருகை தொடர்பில் முன்கூட்டியே தகவல் கிடைத்தமையினால் பல்கலைக்கழக மாணவர்கள் பல்கலைக்கழக வளாகத்திற்கு வருகை தருவதற்கு முன்னதாகவே இந்த போராட்டத்தை முன்னெடுத்திருந்தனர்.
கிளிநொச்சி பல்கலைக்கழகத்தின் தொழிநுட்ப பீட மாணவர்களினால் ஆரம்பிக்கப்பட்ட போராட்டத்திற்கு ஏனைய பீடங்களின் ஆதரவு குறுகிய காலத்தில் கிடைத்துள்ளது.
அமைச்சருக்கு எதிராக பல்கலைக்கழக மாணவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டமையினால் அமைச்சர் திரும்பிச் சென்றுள்ளதுடன் அமைச்சருக்கு பாதுகாப்பு வழங்கும் உத்தியோகத்தர்கள் பாதுகாப்பு வழங்குவதற்கு செயற்பட்ட போதும் பல்கலைக்கழக மாணவர்கள் கூச்சலிட்டுள்ளனர்.
போராட்டத்தை தடுக்கும் வகையில் கிளிநொச்சி பல்கலைக்கழக பாதுகாப்பு அதிகாரிகளை அதிகாரிகள்,வாயிலை மூட எத்தனித்த போது , மாணவர்கள் வாயிலை விட்டு வெளியே வந்து வாயிலுக்கு முன்பாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.