முதல் ஒருநாள் கிரிக்கெட்: 10 விக்கெட் வித்தியாசத்தில் ஜிம்பாப்வேயை வீழ்த்தியது இந்தியா.
ஜிம்பாப்வே- இந்தியா அணிகள் இடையிலான முதல் ஒருநாள் போட்டி ஹராரே மைதானத்தில் நடைபெற்றது. டாஸ் வென்ற இந்திய அணி, பந்துவீச்சை தேர்வு செய்தது.
முதலில் பேட்டிங் செய்த ஜிம்பாப்வே அணி 40.3 ஓவர்களில் 189 ரன்களில் ஆல் அவுட் ஆனது. வேகப்பந்து வீச்சாளர் தீபக் சாஹர் 27 ரன்கள் கொடுத்து 3 விக்கெட்டுகளை கைப்பற்றினார். மற்றொரு வேகப்பந்துவீச்சாளர் பிரசித் கிருஷ்ணா, சுழற்பந்துவீச்சாளர் அக்சர் பட்டேல் ஆகியோரும் தலா 3 விக்கெட்டுகளை கைப்பற்றினர்.
இதையடுத்து 190 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய இந்திய அணி விக்கெட் இழப்பின்றி இலக்கை எட்டியது. அதிரடியாக ஆடிய துவக்க வீரர்கள் ஷிகர் தவான் 88 ரன்களும், ஷூப்மான் கில் 82 ரன்களும் விளாச, இந்தியா 30.5 ஓவர்களில் 192 ரன்களை குவித்தது. இதனால் 10 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
இந்த வெற்றியின் மூலம் 3 போட்டி கொண்ட ஒருநாள் தொடரில் இந்தியா 1-0 என முன்னிலையில் உள்ளது. இரண்டாவது போட்டி 20ம் தேதி நடைபெறுகிறது