ஜெனிவா மாநாடு ஒருபோதும் இலங்கைக்குச் சவால் இல்லை – அடித்துக் கூறுகின்றார் ரணில்.

“ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் சபையின் மாநாடு இலங்கைக்கு ஒருபோதும் சவாலாக – ஆபத்தாக அமையாது. எதிர்வரும் மாநாட்டில் இலங்கை விவகாரங்களை விசேட குழு ஒன்று கையாளும். அதேவேளை, அந்த மாநாட்டில் இலங்கையின் நிலைப்பாட்டை அறிக்கையூடாக வெளிவிவகார அமைச்சர் சமர்ப்பிப்பார்.”

இவ்வாறு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.

அடுத்த மாதம் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் சபையின் அமர்வு இடம்பெறவுள்ள நிலையில், ஐ.நா. மனித உரிமைகள் ஆணையாளருக்கு அரசியல் கட்சிகள் மற்றும் பல்வேறு சிவில் அமைப்புக்கள் கடிதங்கள் அனுப்பியுள்ளன. இலங்கைக்கு எதிராகக் கடுமையான நிலைப்பாட்டை எடுக்க வேண்டும் என்று அந்தக் கடிதங்களில் வலியுறுத்தப்பட்டுள்ளன. இது தொடர்பில் கருத்துரைக்கும்போதே ஜனாதிபதி மேற்கண்டவாறு கூறியுள்ளார்.

அத்துடன், 6 புலம்பெயர் அமைப்புக்கள் மற்றும் 316 தனிநபர்கள் மீதான தடை நீக்கத்துக்கும் அடுத்த மாதம் நடைபெறவுள்ள ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் சபையின் மாநாட்டுக்கும் இடையில் எவ்வித சம்பந்தமும் இல்லை என்றும், இந்த அமைப்புக்கள் மற்றும் தனிநபர்கள் தொடர்பில் பாதுகாப்பு அமைச்சின் தீவிரமான ஆராய்வின் பின்னரே தடை நீக்கப்பட்டது என்றும் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க மேலும் குறிப்பிட்டுள்ளார்.

Leave A Reply

Your email address will not be published.