யானை தாக்கி குடும்பஸ்தர் சாவு!

காட்டு யானை தாக்கிக் குடும்பஸ்தர் ஒருவர் பரிதாபகரமாக உயிரிழந்துள்ளார்.
இந்தச் சம்பவம் மட்டக்களப்பு மாவட்டம், வெல்லாவெளி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட யானைகட்டியவெளி பிரதேசத்தில் இன்று இடம்பெற்றுள்ளது.
மண்டூர் மூன்றாம் பிரிவிவைச் சேர்ந்த மூன்று பிள்ளைகளின் தந்தையான இளையதம்பி யோகநாதன் என்பவரே உயிரிழந்துள்ளார் வெல்லாவெளி பொலிஸார் தெரிவித்தனர்.
தனது வீட்டிலிருந்து வேளாண்மை வயலைப் பார்வையிடுவதற்காகச் சென்றபோது வீதியோரத்தில் உள்ள காட்டுப் பகுதியில் மறைந்திருந்த யானை, குறித்த நபரைத் தாக்கியதில் சம்பவ இடத்திலேயே அவர் உயிரிழந்துள்ளார் என்று பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரணையின்போது தெரியவந்துள்ளது.
களுவாஞ்சிக்குடி நீதிமன்ற பதில் நீதிவானின் உத்தரவுக்கமைவாக சம்பவ இடத்துக்குச் சென்ற மண்டூர் பிரதேச திடீர் மரண விசாரணை அதிகாரி தம்பிப்பிள்ளை தவக்குமார் சடலத்தைப் பார்வையிட்டதுடன், பிரேத பரிசோதனையின் பின்னர் பிரேதத்தை நெருங்கிய உறவினர்களிடம் ஒப்படைக்கும்படி பொலிஸாருக்கு உத்தரவிட்டார்.
சம்பவம் பற்றிய மேலதிக விசாரணைகளை வெல்லாவெளி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.